Sunday, November 11, 2007

மணிக்கணக்கு Vs Moneyகணக்கு

ரியாத் தமிழ்ச்சங்கத்தின் எழுத்துக்கூடத்தில் இன்று வெளியான ஒரு கவிதை...


----- Forwarded Message ----
From: Malar Saba
To: ezuththukkoodam@googlegroups.com
Sent: Saturday, November 10, 2007 5:08:54 AM
Subject: [Ezuththukkoodam] மணிக்கணக்கு Vs Moneyகணக்கு



அன்புடையீர்!

வனக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த "சொல்வேந்தர் குழு" நிகழ்ச்சி ஒன்றில் "இல்லத்தரசிகளுக்கு விடுமுறை ஏன் கொடுப்பதில்லை?" என்ற தலைப்பில் ஒரு மணித்துளி என்னைப் பேச அழைத்த போது..விடுமுறை வேண்டுமென்பதற்காகவே நான் வேலைக்குப் போகாமல் இல்லத்தரசியாக இருப்பதாகக் கூறினேன்...

அன்று எழுதிய கவிதை இது..

கடந்த எழுத்துக்கூடச் சந்திப்பின் போது ஒரு தருணத்தில் திருமதி. ஜெயந்தி பாலமுகுந்தன் அவர்கள் பெண்கள் வேலைக்குப் போனதும் நிறைய மாறிவிட்டது என்று கூறினார்கள்...அப்போது இக்கவிதை நினைவுக்கு வந்தது..எழுத்துக்கூடத்தில் பதிவிட எண்ணினேன்..

அயல்நாட்டில், குறிப்பாக இங்கே வேலைக்குப் போகும் பெண்களின் நிலைமை பெரும்பாலும் இதுதான்..விதிவிலக்குகளும் இருக்கக்கூடும்...(இந்தியாவில் நிலைமை சற்றுத் தேவலாம் என்பது என் கருத்து)

பெண்கள் வேலைக்குப் போகக்கூடாது என்பதல்ல கருத்து...அவர்கள் சந்திக்கும் இழப்புகளே கவிதையின் வழக்கு...

மணிக்கணக்கு Vs Moneyகணக்கு

என் தலையைக்
கோத நேரமில்லாத நிலை..
பிள்ளை தலைவாரிப்பூச்சூட்டிப்
பாடசாலைக்கு அனுப்புவதென்பது
கனவாகிப் போனது..

வாய்க்கு ருசியாகச்
சமையல் செய்து
வருடங்கள் ஆகிவிட்டது..
லக்கி கஃபே தோசை
முனைக்கடை ஷவர்மா
பழகிப் போய்விட்டது..

அனலாய்க் காயும் காய்ச்சல்
பிள்ளைக்கு என்றாலும்
தனியாய்த் தவிக்க விட்டுவிட்டுக்
கடமைக்காய் மருந்து கொடுத்துக்
கடமைக்காக விரையத்
தாய்மனம் தயாராகிவிட்டது...

பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுத்து
அலுத்து விட்டது
விசேட வகுப்புகளில்
மாலையிலும் வீடு
மாணவர்களால் நிறைந்திருக்க..
தயங்கித் தயங்கி ஐயங்களோடு
காத்திருந்து காத்திருந்து
என் பிள்ளை தூங்கியே போய்விட்டது...

பள்ளியில்கூட
பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு
மும்மாதம் ஒருமுறை..
இங்கு கணவன் மனைவி சந்திப்பு
பெற்றோர் பிள்ளைகள் சந்திப்பு..
வருடத்தில் எப்போதோ சிலமுறை..

கணவன் கூட மணிக்கணக்காய்ப் பேசி
மாதங்கள் பல ஆகிவிட்டது..
பிள்ளைகளைக் கொஞ்சிப் பேசி
வாரங்கள் பல ஆகிவிட்டது
வார இறுதிகளிலும்
விருந்து கடைகள் ...
நடனம் பாட்டு என்று
பிள்ளைகளின் வகுப்புகள்...
போதும் போதும் என்றாகிவிட்டது..

கவிதை எழுத,ரசிக்க,
கைவேலை தையல் செய்ய
இன்னிசை ரசிக்க
சுஜாதா பாலகுமாரன்
வரிகளில் லயிக்க.......
நேரமின்றிப் போனது

தேவைகளின் அழைப்பில்
சேவைகள் செயலிழந்து போனது

மாத இறுதியில்
கைகளில் கிடைக்கும்
பணத்தின் கனத்தில
மனதின் கனம்
கொஞ்சம் மயங்கிவிட்டது

ரியால்களை ரூபாயாக
மாற்றி மகிழும்
Money கணக்கில்
மணிக்கணக்குகள்
தொலைந்த கதை
மறந்தே போய்விட்டது...

அன்புடன்,
மலர்.