Thursday, August 14, 2008

சுதந்திர தினத்தன்று உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்த தியாகி மனைவி கைது

சுதந்திர தினத்தன்று உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்த தியாகி மனைவி கைது


முதுகுளத்தூர்,ஆக.15-

சுதந்திர தினத்தன்று உண்ணாவிரத போராட் டம் நடத்தப்போவதாக அறிவித்த தியாகியின் மனைவியை போலீசார் கைது செய்தனர்.

தியாகி மனைவி

கடலாடி தாலுகா ஆப்ப னூர் கிராமத்தை சேர்ந்தவர் நீல மேகத்தேவர். சுதந்திர போராட்ட தியாகியான இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவ ரது மனைவி ராமு அம்மா ளுக்கு அரசு சார்பில் ஆப்ப னூரில் 5 செண்டு நிலம் வழங் கப்பட்டது.

ஆனால் இந்த இடத்தை அரசு சார்பில் ஊரணி வெட் டுவதற்காக ஒதுக்கியுள்ளனர். இந்த இடத்திற்கு பதிலாக அவருக்கு மாற்று இடம் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இது வரை வேறு இடம் ஒதுக்கி வழங்கப்படவில்லையாம்.

உண்ணாவிரதம்

இந்த நிலையில் அவர் சுதந்திர தினத்தன்று கலெக்டர் அலுவலகம் முன்பு தனது குடும் பத்தினருடன் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் இருக்கப்போவதாக அறிவித் திருந்தார். இதுகுறித்து கட லாடி கிராம நிர் வாக அதிகாரி முத்துவேல் போலீசில் புகார் செய் தார். அதன் பேரில் கட லாடி போலீஸ் இன்ஸ்பெக் டர் பழனிச்சாமி, சப்-இன்ஸ் பெக்டர் சிவஞானமூர்த்தி மற் றும் போலீசார் தேச விரோத செயல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ராமு அம் மாள், அவரது மகன் கணே சன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத் தனர்.

வாக்காளர் வரைவு பட்டியலில் குளறுபடி

வாக்காளர் வரைவு பட்டியலில் குளறுபடி


தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்ய பொதுமக்கள் வேண்டுகோள்


ராமநாதபுரம், ஆக.14: ராமநாதபுரம் மாவட்ட தொகுதி மறுசீரமைப்பின்படி சட்டமன்ற வாரியாக வெளியிடப்பட்ட வரைவு வாக்கா ளர் பட்டியல் குளறுபடியாக உள்ளது. இதனால், பொதுமக்கள் பலர் அலைக்கழிக்க வைக்கப்படுகின்றனர்.

தொகுதி மறுசீரமைப்பின்படி சட்டமன்ற வாரியாக வரைவு வாக்காளர் பட்டியலை ஜூலை 24 முதல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய வாக்காளர் சேர்ப்பு, பெயர் நீக்கம் உள்பட பணிகளுக்கு விண்ணப்பங்களை வழங்கவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் அந்தந்த

வாக்குச்சாவடிகளில் பெறவும் உத்தரவிட்டுள்ளது. இதுதவிர களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்கவும், அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்பட பணிகளுக்கு விண்ணப்பங்களை வழங்கி, அங்கு பொதுமக்களிடம் பூர்த்தி செய்து பெறவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதன்படி, மாவட்ட நிர்வாகமும், பொதுமக்கள் பார்வைக்கு வரைவு வாக்காளர் பட்டியல் சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர், தாசில்தார் அலுவலகங்களிலும், வாக்குச்சாவடிகளிலும் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்படுகிறது. பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு சென்றால் எந்த பட்டியலும் வைக்கப்படவில்லை. வாக்காளர் பட்டியலை பார்த்தால் மட்டுமே தங்களது பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்ய முடியும். வாக்காளர் பட்டியலை அலுவலர்கள் காட்ட மறுப்பதாக பல இடங்களில் பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

இதனால், வாக்குச்சாவடி மையங்கள் அல்லது சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் புதிய வாக்காளர் சேர்ப்பு, குடிபெயர்ப்பு மற்றும் நீக்கம் உள்பட விண்ணப்பங்கள் கிடைப்பதில்லை. விண்ணப்பங்கள் ஸ்டாக் இல்லை. ஜெராக்ஸ் கடையில் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று அலுவலர்கள் கூறி பொதுமக்களை அனுப்பி வைக்கின்றனர். ராமநாதபுரம் சபாநடேசய்யர் துவக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையம் முதல் பல வாக்குச்சாவடி மையங்களில் விண்ணப்பம் இல்லை என்று தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இதுபோன்ற தவறுகளை சில அரசு அலுவலர்கள் தொடர்ந்து செய்து வருவ தால் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை தெரிந்து கொள்ள முடி யாமல் மக்கள் தினமும் ஏமாற்றம் அடைகின்றனர்.

கடந்த வாரம் கலெக்டர் கிர்லோஷ்குமார் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் குறித்து ஆய்வு நடத்தினார். அப்போது நிறைய குறைபாடுகள் இருப்பது தெரியவந்தது. தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு நடத்தினால் வாக்காளர் பட்டியலின் குளறுபடி வெளிச்சத்திற்கு வரும் என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

வேல்டு விஷன் தொண்டு நிறுவன சேவை: ஜப்பான் தொண்டு நிறுவனத்தினர் பாராட்டு

வேல்டு விஷன் தொண்டு நிறுவன சேவை: ஜப்பான் தொண்டு நிறுவனத்தினர் பாராட்டு

சாயல்குடி அருகே நரிப்பையூர் பகுதியில் வேல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்று வரும் மக்கள் நலத் திட்டப்பணிகளை ஜப்பான் தொண்டு நிறுவன அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை பாராட்டினர்.

முதுகுளத்தூர் வட்டார வேல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவன சார்பில் முதுகுளத்தூர், கமுதி, கடலாடி ஆகிய தாலுகாக்களில், பொது மக்களுக்காகப் பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றி வருகின்றனர்.

குறிப்பாகக் குடிநீர் வசதி, ஊருணிகள் வெட்டிதல், சாலை வசதி, கல்வி வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து வருகின்றனர்.

சாயல்குடி மையத்தைச் சேர்ந்த நரிப்பையூரில் நடைபெற்றுள்ள மக்கள் நலத்திட்டப் பணிகளைப் பார்வையிட, ஜப்பான் நாட்டு தொண்டு நிறுவன அலுவலர்கள் சிகோ அகியோமா, டுமாகோ ஐடேகா ஆகியோர் தலைமையில் 20 பிரதிநிதிகள் வந்திருந்தனர்.

தொண்டு நிறுவன திட்ட மேலாளர் ஜே. ஜெசுகரன் தலைமையில் திட்டப் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், தன்னார்வலர்கள் உள்ளிட பலரும் வரவேற்றனர்.

ஜப்பான் குழுவினர், நலத் திட்டப்பணிகளைப் பார்வையிட்டு பாராட்டினர்.

மேலும் நரிப்பையூர் ஜனசக்தி மகளிர் கூட்டமைப்பு பயிற்சி அரங்கில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளைப் ஜப்பான் குழுவினர் கண்டு மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொண்டு நிறுவன திட்ட மேலாளர் ஜெசுகரன் தலைமயில், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் யோவான், இளங்கோவன், பால் முத்தையா மற்றும் திட்டப்பணியாளர்கள் பலரும் செய்திருந்தனர்.