Thursday, January 8, 2009

ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைஞர் மன்றங்களின் செயல்பாடு குறித்து அதிகாரி ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைஞர் மன்றங்களின் செயல்பாடு குறித்து அதிகாரி ஆய்வு


தொண்டி,ஜன.9-

ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைஞர்மன்றங்களின் செயல்பாடு குறித்து மத்திய திட்ட கமிஷன் அதிகாரி ஆய்வு செய்தார்.

ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுபயணம் செய்த மத்திய அரசின் திட்ட கமிஷன் முதுநிலை ஆய்வு அதிகாரி ஆர்.பி.சிங் இந்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறையின்கீழ் செயல்படும் நேரு யுவகேந்திராவின் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், மண்டபம், தேவிபட்டிணம், உத்திரகோசமங்கை பகுதிக்கு சென்ற அவர் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து இளைஞர் மன்ற தலைவர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அதன்பிறகு ராமநாதபுரத்தில் நடந்த நேருயுவகேந்திரா இளைஞர் மன்ற தலைவர்களுக்கான கருத்தரங்கில் கலந்துகொண்டு கிராமப்புற இளைஞர்மன்றங்களையும் , இளைஞர்களையும் வலுப்படுத்துவது, நேருயுவகேந்திராவின் பணிகள், திட்டங்கள், இளைஞர் மன்றங்களின் செயல்பாடுகள் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது இளைஞர்மன்றங்களின் சார்பில் இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு பயிற்சிகளையும் இளைஞர் மன்றங்களுக்கான நிதிஉதவியையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அவர் இதுகுறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் ராமநாதபுரம் மாவட்ட நேருயுவகேந்திராவின் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பேட்டி

அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் 500 மாவட்டங்களில் நேருயுவகேந்திரா செயல்பட்டு வருகிறது. முற்றிலுமாக இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக செயல்பட்டுவரும் இந்த அமைப்பு எதிர்காலத்தில் மீதமுள்ள மாவட்டங்களிலும் தொடங்கப்பட உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைஞர்மன்றங்களின் செயல்பாடுகள் மிகவும் பிரமிக்ககூடிய வகையில் உள்ளது. இளைஞர்கள் இந்த மாவட்டத்தில் கலை மற்றும் விளையாட்டில் சிறந்துவிளங்குகிறார்கள். நேருயுவகேந்திராமூலம் இளைஞர்களுக்கு கணிணி,தையல், கைவினைப்பொருட்கள் தயாரித்தல், மோட்டார் மெக்கானிசம், தலைமைத்துவம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டுவருகிறது. வரும்காலத்தில் கிராமப்புற இளைஞர்மன்றங்கள் சங்கங்கள் பதிவு சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டால் நிதிஉதவிகள் வழங்கப்பட்டு வலுப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். அவருடன் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களின் இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் ஜேம்ஸ், முகமது சதக் பாலிடெக்னிக் திட்ட அலுவலர் யோசுவா,வாசன் கம்ப்ïட்டர் இயக்குனர் எஸ்.நாராயணன்,நேரு இளைஞர்மன்ற இயக்குனர் மணிமாறன்,தேசிய சேவை தொண்டர்கள் பரமசிவம்,புவனா,நித்யா, சக்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

www.muduvaivision.com