Thursday, July 30, 2009

அரிய கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க காசி - ராமேசுவரம் ரயிலுக்கு மன்னார் வளைகுடா எக்ஸ்பிரஸ் எனப் பெயரிட வேண்டும்

அரிய கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க காசி - ராமேசுவரம் ரயிலுக்கு மன்னார் வளைகுடா எக்ஸ்பிரஸ் எனப் பெயரிட வேண்டும்

www.mudukulathur.com


ராமநாதபுரம், ஜூலை 29: உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் சுமார் 3600-க்கும் மேற்பட்ட அரியவகை கடல்வாழ் உயிரினங்கள், 117 வகையான உயிருள்ள அற்புத பவளப் பாறைகள் உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதி குறித்து தேசிய அளவில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த காசி-ராமேசுவரம் புதிய ரயிலுக்கு மன்னார் வளைகுடா எக்ஸ்பிரஸ் எனப் பெயரிடுவது பொருத்தமாக இருக்கும்.

தமிழகத்தின் தென்கிழக்கு கடல் பகுதியே மன்னார் வளைகுடா எனப்படுகிறது. இப் பகுதி ராமேசுவரத்தில் தொடங்கி கன்னியாகுமரி வரையுள்ள இந்திய எல்லைக்கு உள்பட்ட கடல்பரப்பை உள்ளடக்கியதாகும்.

மன்னார் வளைகுடா கடல் பகுதி என்பது இலங்கைத் தீவில் தலைமன்னாருக்கும் தெற்கு தமிழக கடலோரத்தில் வளைகுடா பரப்புக்கும் இடைப்பட்ட பரப்பாகும்.

குடா என்றால் ஆழம் குறைந்த கடல் பகுதி எனப்படுகிறது. இலங்கையில் தலைமன்னார் எனப்படும் மன்னாரை ஒட்டியுள்ள பகுதியாகவும் இருப்பதால், மன்னார் வளைகுடா எனவும் அழைக்கப்படுகிறது.

மன்னார் வளைகுடா கடல் பகுதியை மத்திய அரசு கடந்த 1986-ம் ஆண்டு கடல்சார் தேசியப் பூங்காவாக அறிவித்தது. இக் கடல் பகுதியில் உள்ள 21 தீவுகளும் அதனைச் சுற்றியுள்ள பவளப் பாறைகளையும் உள்ளடக்கிய 560 சதுர கி.மீ பரப்பளவே தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.

1989-ல் யுனெஸ்கோ நிறுவனம் பரிந்துரையின்படி, இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவிலும் வளமான பகுதியாக இருப்பதால், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்படுத்தப்பட்ட முதல் கடல்சார் தேசியப் பூங்காவாகும்.

எனவேதான், இதனைப் பாதுகாக்கவும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு ராமநாதபுரத்தில் மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளை என்ற ஓர் அமைப்பை நிறுவியது.

இந்த அமைப்பு பல்வேறு அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து கூட்டு ரோந்துப் பணி மேற்கொண்டு அரிய வகை கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாத்து வருகிறது.

மன்னார் வளைகுடா கடல் வளம் நமது பகுதியில் உள்ள ஓர் அரிய பொக்கிஷம். முதுகெலும்பில்லாத உயிருள்ள பிராணிகளின் எளிய தொகுப்பாகவும் பவள உயிரிகளால் ஆனவைதான் பவளப்பாறைகள் என்று இன்றும் பலரும் அறியாமல் உள்ளனர்.

கடலுக்கு அடியில் உள்ள பலவகையான பவளப் பாறைகளைப் பார்த்து மகிழ மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக அறக்கட்டளை சுற்றுலாப் பயணிகளுக்காக "கண்ணாடி இழைப்படகு' சவாரிக்கும் ஏற்பாடு செய்துள்ளது.

அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் குறித்து அறக்கட்டளையின் சுற்றுச்சூழல் அலுவலர் வீ. நாகநாதன் கூறியதாவது:

சர்வதேச திமிங்கில ஆய்வு அமைப்பு முக்கியமான கடல் பாலூட்டிகள் உலக அளவில் அதிகமாக இருக்கும் இடம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில்தான் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இதுதவிர, உலகிலேயே வேறு எங்குமே இல்லாத அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான 100 வகை முள்தோலிகள், 260 வகை சங்கு சிப்பிகள், 450 வகை மீன்கள், 70 வகை கணுக்காலிகள், 6 வகை திமிங்கிலங்கள், கண்களைக் கவரும் விதத்தில் 150 வகையான வண்ண மீன்கள், பாலூட்டி வகையில் 12 வகையான ஆவுலியாக்கள் எனப்படும் கடல் பசுக்கள், 34 வகை கடல் அட்டைகள், 12 வகையான கடல் பாம்புகள், தலை குதிரையைப் போலவும் வால் குரங்கைப் போலவும் நின்று கொண்டே குதித்துக் குதித்து ஓடும் அற்புதக் கடல் குதிரைகள், கடல் பன்றிகள், கடல் ஆமைகள் இப்படியாக 3600 வகைகள் உள்ளன.

மேஜை வடிவம், தட்டு வடிவம், மனித மூளை வடிவம் மற்றும் மான்கொம்பு வடிவம் உள்ளிட்ட பவளப் பாறைகளின் வகைகள் 117-ம் வளர்ந்து கொண்டே இருக்கும் உயிரினங்களும்தான் இக் கடல் பகுதியில் இருக்கின்றன என நாகநாதன் தெரிவிக்கிறார்.

இந்தியக் கடல் பகுதியில் காணக் கிடைக்காத கடல் வளங்கள் அடர்ந்து, படர்ந்து, வியாபித்து இருக்கும் அற்புத சூழல் தற்போது கொஞ்சம், கொஞ்சமாக அழிந்துகொண்டே வருவதுதான் வேதனைக்குரியது.

வெடிவைத்து மீன் பிடித்தல், கடல் வளத்தையே அழிக்கும் வகையில் பல்வேறு மீன்பிடி முறைகள், கடல் மாசுபடுதல் போன்ற காரணங்களால் மக்களிடையே இதுகுறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை.

இதனால் இந்த அற்புத கடல்வளம் என்னும் இயற்கை சிதைந்து குன்றி வருகிறது.

எனவே, இத் தேசியப் பூங்கா குறித்து தேசிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, இவற்றை அழிவிலிருந்து பாதுகாக்க காசி முதல் ராமேசுவரம் வரை விடப்படவுள்ள புதிய விரைவு ரயிலுக்கு (கடந்த ரயில்வே பட்ஜெட்டிலேயே அறிவிக்கப்பட்டது) மன்னார் வளைகுடா எக்ஸ்பிரஸ் எனப் பெயரிடுவது சிறப்பாக அமையும்.

மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்து மன்னார் வளைகுடா எக்ஸ்பிரஸ் எனப் பெயர் வைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.