Monday, December 8, 2008

சாலை விபத்துகளை தடுக்க பிரத்யேக "சாஃப்ட்வேர்'!

சாலை விபத்துகளை தடுக்க பிரத்யேக "சாஃப்ட்வேர்'!


சென்னை, டிச. 8: தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்கப் பிரத்யேக சாஃப்ட்வேரை மாநில போக்குவரத்து திட்ட பிரிவு (எஸ்.டி.பி.சி.) வடிவமைத்துள்ளது.

இந்த சாஃப்ட்வேரை, கூடுதல் டிஜிபி எஸ்.கே. டோக்ரா தனது சொந்த முயற்சியில் வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழத்தில்தான் அதிகம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி.) புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சி கூறித்து டோக்ரா கூறியதாவது:

மகாராஷ்டிரத்திலும், தமிழகத்திலும்தான் லட்சக்கணக்கான வாகனங்கள் உள்ளன. இந்த மாநிலங்களில் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாவதற்கு இதுவும் ஒரு காரணம்.

சாஃப்ட்வேரால் விபத்துகளை தடுக்க முடியுமா? "கடந்த 3 மாதங்களாக இந்தப் புதிய சாஃப்ட்வேரின் கீழ் அனைத்து மாவட்ட போக்குவரத்து காவல் நிலையப் பகுதிகளில் நடக்கும் விபத்துகள் குறித்து புள்ளி விவரங்களை சேகரிக்கிறோம்.

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் அன்றைய தினம் நடக்கும் விபத்து, அதில் தொடர்புடைய வாகனங்கள், விபத்து நடக்கும் நேரம் என பல விவரங்கள் குறித்து சாஃப்ட்வேர் மூலமாகப் பட்டியலாகப் பிரித்து விடுகிறோம்.

பின்னர் குறிப்பிட்ட காவல் நிலைய அதிகாரியைத் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட கால நேரத்தில் விபத்துகள் நடப்பதால் அங்கு போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியை முடுக்கிவிட உத்தரவிடப்படுகிறது.

அதுபோல குறிப்பிட்ட நேரத்தில் அதிகமாக உள்ள வாகன நெரிசலையும், விபத்தில் தொடர்புடைய வாகனங்கள் பஸ்ஸô, வேனா அல்லது இரு சக்கர வாகனமா என்று கணக்கெடுத்து வாகன ஓட்டிகளின் உரிய ஆவணங்களையும் சோதனையிட உத்தரவிடுகிறோம்' என்றார் டோக்ரா.

32 பேரில் இருந்து 20 பேர் ஆக குறைப்பு: "இதற்காக புதிய நெட்வொர்க் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், எஸ்.பி.க்கள் மற்றும் வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் இந்தப் புள்ளி விவரங்களை இணையதளத்தில் பார்த்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய சாஃப்ட்வேர் முறையால் விபத்துகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தமிழகத்தில் நாளொன்றுக்கு சாலை விபத்துகளில் 32 பேர் உயிரிழந்த நிலைமை மாறி, தற்போது 20 பேர் ஆக குறைந்துள்ளது.

நாட்டிலேயே, தமிழகத்தில்தான் இம்மாதிரியான சாஃப்ட்வேரைப் பயன்படுத்தி வருகிறோம். பிற மாநில காவல்துறையினரும் இம்மாதிரியான சாஃப்ட்வேரை பயன்படுத்த ஆவலாக உள்ளனர்' என்றார் அவர்.