Thursday, June 11, 2009

காந்தி மியூசியத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்: துணைத் தலைவர் பேட்டி

காந்தி மியூசியத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்: துணைத் தலைவர் பேட்டி

மதுரை, ஜூன் 10: மதுரை காந்தி மியூசியத்தில் விரைவில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்று அதன் துணைத் தலைவர் மு. மாரியப்பன் தெரிவித்தார்.

இது தொடர்பாக "தினமணி'யிடம் அவர் புதன்கிழமை கூறியது:

1959-ம் ஆண்டு ஏப்ரல் 15-ல் ஜவஹர்லால் நேருவால் மதுரை காந்தி மியூசியம் தொடங்கிவைக்கப்பட்டது. தென்னிந்தியாவிலேயே மதுரையில் தான் காந்தி மியூசியம் அமைந்துள்ளது. அகில இந்திய காந்தி நினைவு நிதி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டு வரும் மதுரை காந்தி மியூசியத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் மற்றும் ராதா தியாகராஜன், ம.பொ.சி. உள்ளிட்டோர் தலைவர்கள் பொறுப்பை வகித்துள்ளனர்.

மத்திய அரசின் கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள நிரந்தர வைப்புத் தொகையின் வட்டியும், தமிழக அரசு சார்பில் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் கிடைக்கும் மானியத்தில்தான் இந்த மியூசியம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

தனியார் வசமாவதற்கு வாய்ப்பில்லை: இந்நிலையில் மியூசியத்தைப் பராமரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் நிதி ஆதாரம் தேவைப்பட்டதன் அடிப்படையில் பொதுக்குழு முடிவின்படி, பதவி வழி வந்த உறுப்பினர்கள் தவிர மேலும் சிலரை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக அவர்களிடம் ஆண்டுக்கு ரூ.5,000 பெறவும் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால், இந்த உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக இதுவரை முறைப்படி பதிவுத் துறையில் பதிவு செய்யாததால் அந்த தீர்மானத்தை செயல்படுத்தப்படாமல் போய்விட்டது.

மேலும், அகில இந்திய காந்தி நினைவு நிதி அறக்கட்டளையின் அனுமதி பெறாமல் மயூசியத்தில் புதிய கட்டடமோ, மேம்பாட்டுப் பணிகளோ மேற்கொள்ள முடியாது. இவ்வாறு இருக்கும்போது அறக்கட்டளையின் அனுமதியின்றி இந்த மியூசியத்தை எந்தத் தனியாரும் கைப்பற்றிவிட முடியாது. மதுரை மியூசியத்தில் ரூ.40 லட்சம் செலவில் "இன்ஸ்ட்டியூட் ஆப் காந்தியன் ஸ்டடி அன்ட் ரிசர்ச் சென்டர்' கட்டப்பட்டது, மியூசியம் முன்பு மாநகராட்சி அனுமதி பெறாமலேயே ரூ.5 லட்சம் மதிப்பில் ஹோட்டல் ஒன்று கட்டப்பட்டு, வாடகைக்கு விடப்பட்டது போன்றவை அறக்கட்டளை அனுமதி பெறாமல் நடைபெற்றுள்ளதால், சில பிரச்னைகள் இன்னும் நீடிக்கிறது.

மேம்படுத்த நடவடிக்கை: சென்ற ஆட்சியில் மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது பராமரிப்புப் பணிக்காக தில்லி மற்றும் கோல்கத்தாவில் உள்ள காந்தி மியூசியத்துக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை முன்மாதிரியாகக் கொண்டு மதுரை மியூசியத்துக்கும் ரூ.5 கோடி நிதி ஒதுக்கக் கோரியிருந்தோம்.

இதையடுத்து, அமைச்சரின் வேண்டுகோளின்படி மதுரை காந்தி மியூசிய விரிவாக்கம், மேம்பாடு குறித்த திட்ட வரைபடம் தமிழக அரசு மூலம் கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் அனுப்பிவைக்கப்பட்டது. விரைவில் அந்த நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
மேலும், வெளிநாட்டுப் பயணிகளுக்கு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதியை மேம்படுத்தும் வகையில், "ஐரோப்பிய முறையிலான டாய்லட்', தரமான உணவு வகைகள் கொண்ட கேன்டீன், குடிநீர் வசதி, காந்தியால் எழுதப்பட்ட புத்தகங்கள் உள்பட நினைவுப் பொருள்கள் விற்பனை செய்யும் பிரிவு உள்ளிட்டவை ரூ.10 லட்சத்தில் தொடங்க கடந்த 7 மாதங்களுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டுள்ளது. விரைவில் இத் திட்டங்களும் நிறைவேற்றப்படும்.
தமிழக அரசின் மானியம் உயர்த்தப்படவேண்டும்: மியூசியம் பராமரிப்பு மற்றும் ஊழியருக்கான சம்பளம் தொடர்பான செலவைச் சரிக்கட்ட தமிழக அரசும் ஆண்டுதோறும் மானியம் வழங்குகிறது.

இந்த மானியத்தை ஆண்டுக்கு ரூ.10 லட்சமாக வழங்க வேண்டும் என ஏற்கெனவே கோரியிருந்தோம். ஆனால், அது நிராகரிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில், தமிழக கலை மற்றும் பண்பாட்டுத்துறை செயலர் பங்கேற்ற கூட்டம் ஒன்றில் இக்கோரிக்கையை மீண்டும் வைத்தோம். அவரது ஆலோசனையின்பேரில் மானியம் உயர்த்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் தமிழக அரசுக்கு விடுத்துள்ளோம். இதுபோன்ற நிதி ஆதாரங்கள் கிடைக்கும்பட்சத்தில் மதுரை காந்தி மியூசியத்தை மேலும் சிறப்பாக மாற்றியமைக்கலாம் என்றார்.

இந்திய விமானப்படைக்கு இளைஞர்கள் தேர்வு

இந்திய விமானப்படைக்கு இளைஞர்கள் தேர்வு

ராமநாதபுரம்,ஜுன்.11-

இந்திய விமான படையில் பணியாற்ற இளைஞர்கள் தேர்வு வருகிற 24-ந் தேதி நடக்கிறது.

விமானப்படை

இந்திய விமான படையில் தொழில்நுட்ப பிரிவு மற்றும் தொழில் நுட்பம் அல்லாத பிரிவுகளில் பணியாற்ற 17 முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்வு சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் வருகிற ஜுலை 24 மற்றும் 26-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.

அடுத்த மாதம் (ஜுலை) 24-ந் தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை தொழில் நுட்பம் அல்லாத பிரிவுக்கு (குரூப் `ஒய்`) தேர்வு நடைபெறும். இதில் கலந்து கொள்பவர்கள் பிளஸ்-2 அல்லது அதற்கு இணையான தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்ïட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேசன், இன்பர்மேசன் டெக்னாலஜி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் 3 வருட டிப்ளமோ படிப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கல்வி தகுதி

இதேபோல 26-ந் தேதி தொழில் நுட்ப பிரிவுக்கு (குரூப் `எக்ஸ்`) தேர்வு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் பிளஸ்-2 அல்லது அதற்கு இணையான படிப்பில் கணிதம், இயற்பியல் பாடங்களுடன் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோ மொபைல், கம்ப்ïட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேசன், இன்பர்மேசன் டெக்னாலஜி இவற்றில் ஏதேனுமொன்றில் 3 வருட டிப்ளமோவுடன் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த தேர்வில் கலந்து கொள்வோர் 10 மற்றும் 12 ம் வகுப்பு சான்றிதழ்கள், டிப்ளமோ மதிப்பெண் பட்டியல், தேசிய மாணவர் படை சான்றிதழ் இவற்றின் அசல் மற்றும் 3 நகல்களுடன் இருப்பிட சான்று, சமீபத்தில் எடுக்கப்பட்ட 7 பாஸ்போர்ட்டு அளவு புகைப்படம், விளையாட்டு உடை (டீ சர்ட், ஷூ) ஆகியவற்றுடன் வரவேண்டும்.

விவரங்கள்

மேலும் விவரங்களை www.indianairforce.nic.in என்ற இணையதள முகவரியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். எனவே தகுதியுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் வாசுகி கேட்டுக்கொண்டுள்ளார்.

காந்தி மியூசியம் தனியார் வசமாகிறதா?

காந்தி மியூசியம் தனியார் வசமாகிறதா?


கொ.காளீஸ்வரன்





http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=71891&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=


மதுரை, ஜூன் 9: புதிய பொதுக் குழு மேற்கொண்டுள்ள முடிவால் தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவுகளை சுமந்துகொண்டு காட்சியளிக்கும் "மதுரை காந்தி மியூசியம்' தனியார் வசம் சிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மதுரை காந்தி மியூசியத்துக்கு என தனி சிறப்பு உள்ளது. தென் இந்தியாவிலேயே அண்ணல் காந்திக்கு என மியூசியம் உள்ள இடம் மதுரை மட்டும் தான். இது, காந்தி மியூசியம் அசோஷியேசன் சார்பில் தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது.

மகாத்மா காந்தியடிகள் தமிழகத்துக்கு வந்த 20 தடவையில் 5 முறை மதுரை வந்துள்ளார். காந்தியடிகள் கொல்லப்பட்ட பின்னர், அவரது நினைவாக, ஜவஹர்லால் நேருவால் 1957-ல் தொடங்கப்பட்டதுதான் மதுரை காந்தி மியூசியம்.

காந்தி மியூசியம் அமைக்க ஹைதராபாத், சென்னை, மைசூர் என 7 இடங்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் அப்போது முதல்வராக இருந்த காமராஜராலும், எம்.பி.யாக இருந்த என்.எம்.ஆர். சுப்புராமன் முயற்சியாலும்தான் இந்த மியூசியம் மதுரைக்கு கொண்டுவரப்பட்டது எனக் கூறுவர்.

சுமார் 13 ஏக்கர் பரப்பில் ராணி மங்கம்மாளின் அரண்மனையாக இருந்த இந்த இடம் 1956-லிலேயே புதுதில்லியில் உள்ள "அகில இந்திய காந்திய ஸ்மாரட் நிதிக்கு' நன்கொடையாக வழங்கப்பட்டது.

காந்தியின் வாழ்க்கையை சித்தரிக்கும் அரிய புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய
ரத்தக்கறை தோய்ந்த வேஷ்டி, மூக்குக் கண்ணாடி, ராட்டையில் நூற்ற நூல், அவர் பயன்படுத்திய கைக்குட்டை, செருப்பு, தலையணை, கம்பளி உள்ளிட்ட 14 பொருள்கள் இன்றைக்கும் பாதுகாப்பாக இந்த மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர மதுரைக்கு அனுப்பிவைக்கப்பட்ட காந்தியின் அஸ்தி, இந்த மியூசியத்தில் உள்ள "அமைதிப் பூங்கா' என்ற பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற காந்தியை நினைவுகூரும் பல சான்றுகள் இந்த மியூசியத்தில் வைக்கப்பட்டு, அவரது கொள்கைகளை பரப்பி வருகிறது.

மியூசியத்தை பராமரிக்க, மத்திய அரசின் கலை மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் வழங்கப்பட்ட ரூ. 2 கோடி நிரந்த வைப்புத் தொகையின் வட்டியும், தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூ. 1.50 லட்சம் மானியத்தில் தான் மியூசியம் பராமரிப்பு, ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட செலவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போதிய அடிப்படை வசதிகள் இல்லை: மாதம் சுமார் 10,000 பேர் இந்த மியூசியத்தைப் பார்வையிட வருகின்றனர். இதில், வெளிநாட்டினர் 1,200 பேர் வரை வந்து செல்கின்றனர். பார்வையாளர்களுக்கான கழிப்பிட வசதியோ, குடிநீர் வசதியோ போதிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை.

மேலும், இந்த காந்தி மியூசியக் கட்டடத்துக்கு கடந்த 10 ஆண்டுகளுக்குமுன் வர்ணம் பூசப்பட்டுள்ளது. தற்போது இந்த கட்டடம் ஆங்காங்கே கீறல்கள் விழுந்தும், மரக் கிளைகள் முளைத்தும் பரிதாப நிலையில் காட்சியளிக்கிறது.

புதிய பொதுக் குழு திடீர் முடிவு: இந்த மியூசியம் 30 உறுப்பினர்கள் கொண்ட கமிட்டியின் பராமரிப்பில் உள்ளது. இந்த 30 உறுப்பினர்களில் மாவட்ட ஆட்சியர், மேயர், பல்கலைக்கழக துணைவேந்தர், கல்வி அமைச்சர், அரசு செயலர் என பதவி வழிவந்த 10 உறுப்பினர்களும், 19 பேர் நியமன உறுப்பினர்களும், ஒருவர் ஊழியர் உறுப்பினர் எனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பதவி வழி வந்த உறுப்பினர்கள் தவிர மீதமுள்ள உறுப்பினர்கள், 200 பேர் கொண்ட ஒரு பொதுக் குழுவை புதிதாக நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன்படி, இதில் உறுப்பினர்களாக விரும்புவோர் ஆண்டுக்கு ரூ. 5,000 செலுத்தி பொதுக் குழு உறுப்பினர்களாக பதவி வகிக்கலாம். இந்த முடிவுப்படி தற்போது வரை 130-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் என்ன ஆபத்து என்றால், புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள பொதுக் குழுவில் ஒரு நபருக்கு ஆதரவாக பெரும்பாலான உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர் என தியாகிகளாலும், பொதுமக்களாலும் கூறப்படுகிறது. ஒரு காலகட்டத்தில் இந்த பொதுக்குழுவில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் எடுக்கும் எந்த முடிவையும் தடுக்கமுடியாமல் போய்விடும். அப்போது தனி நபர்கள் வைத்ததுதான் சட்டம் என மாறிவிடும் என விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து தற்போதைய காந்தி மியூசிய செயலர் ரெங்கசாமி கூறுகையில், நிதி திரட்டவேண்டிய கட்டாயத்திலேயே புதிய பொதுக்குழு ஏற்படுத்தப்பட்டது. இதில், நன்மை, தீமை என இரு பார்வையுமே உள்ளன. சூழ்நிலைக்குத் தகுந்தவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், காந்தி மியூசியத்தை புதுப்பிக்கும் பணிக்காக தமிழக அரசிடம் நாங்கள் நிதி கோரியுள்ளோம் என்றார்.
அரசு ஏற்குமா?

வரலாற்று சிறப்பு மிக்கதாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கும் காந்தி மியூசியம் என்றாவது ஒருநாள் தனியார் கைக்குச் செல்வதைவிட, தமிழக அரசே தற்போது ஏற்று, தனி அதிகாரி நியமித்து பராமரிக்கப்படவேண்டும் என, தியாகிகளும், பொதுமக்களும் கோரிக்கை எழுப்புகின்றனர்.

முதுகுளத்தூர் தாலுகாவில் ரேஷன் கார்டுகள் வழங்குவதில் மெத்தன போக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

முதுகுளத்தூர் தாலுகாவில் ரேஷன் கார்டுகள் வழங்குவதில் மெத்தன போக்கு மாவட்ட
நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

விண்ணப்பம் கொடுத்து பல ஆண்டுகள் ஆகியும் ஏராளமானோருக்கு ரேஷன் கார்டுகள் வழங்காமல் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் இழுத்தடிப்பு செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இது குறித்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவில் 200 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. விவசாயத்தை நம்பியே காலம் தள்ளும் இந்த கிராம மக்களில் பெரும்பாலானோருக்கு ரேஷன் கார்டுகளின் அவசியம் பற்றி தெரியாமலே உள்ளது. அப்படி ஏதேனும் தகவலறிந்து குடும்ப அட்டை பெற முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்றால் அங்கே இழுத்தடிப்பு செய்து வருகின்றனர் ஊழியர்கள். பாமர மக்கள் செய்வதறியாமல் வருடக் கணக்கில் தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். மேலும் ராம்நாதபுரத்தில் இருந்து இன்னும் பிரிண்ட் ஆகி வரவில்லை. ஆகவே கால தாமதம் ஆகிறது என்ற மலுப்பலான பதிலே பெரும்பாலும் ஊழியர்களிடம் இருந்து வருகிறது. மேலும் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை யாரும் முறையாக ரேசன் கார்டுகள் வழங்கப்படுகிறதா என்று கண்காணிப்பதில்லை.


ஆகவே மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பாமர மக்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

நன்றி : தினபூமி

முதுகுளத்தூர் தாலுகாவில் ஜமாபந்தி நாளை தொடக்கம்

முதுகுளத்தூர் தாலுகாவில் ஜமாபந்தி நாளை தொடக்கம்

www.mudukulathur.com


முதுகுளத்தூர், ஜுன்.11-

முதுகுளத்தூர் தாலுகாவில் வருவாய் தீர்வாய கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. 2-ம் பிரிவாக நாளை முதல் 23-ந் தேதி வரை ஜமாபந்தி நடக்கிறது.

ஜமாபந்தி

முதுகுளத்தூர் தாலுகாவில் 1418ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாய கணக்குகள் ராமநாதபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ஜெயபால் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து 2-ம் பிரிவாக நாளை (12-ந்தேதி) முதல் 23-ந்தேதி வரை ஜமாபந்தி கணக்குகள் தணிக்கை செய்யப்பட உள்ளன.

கீழத்தூவல்

இதன்படி நாளை (12-ந்தேதி) முதுகுளத்தூர் வடக்கு உள்வட்டத்தை சேர்ந்த மேல முதுகுளத்தூர், கீழ முதுகுளத்தூர், புல்வாய்க்குளம், நல்லூர், கீரனூர், மணலூர், ஆணைசேரி ஆகிய வருவாய் கிராமங்களுக்கும், 16-ந் தேதி முதுகுளத்தூர் தெற்கு உள்வட்டத்தை சேர்ந்த சித்திரங்குடி, சோனைப்பிரியான்கோட்டை, ஏனாதி, கண்டிலான், இளஞ்செம்பூர், கீழச்சிறுபோது, மேலச்சிறுபோது, சேந்தனேரி ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் கணக்குகள் ஆய்வு செய்யப்பட உள்ளன. இதேபோல 17-ந்தேதி கீழத்தூவல் உள்வட்டத்தை சேர்ந்த கீழத்தூவல், மேலத்தூவல், விளங்குளத்தூர், வெங்கலக்குறிச்சி, சுவாத்தான், செல்லூர், திருவரங்கம், கொளுந்துரை ஆகிய கிராமங்களுக்கும், 18-ந்தேதி மேலக்கொடுமலூர் உள்வட்டத்தை சேர்ந்த மேலக்கொடுமலூர், சடைக்கனேந்தல், தட்டானேந்தல், கூத்தாடியேந்தல், கீழக்கொடுமலூர், விக்கிரமபாண்டியபுரம், சாத்தனூர், கீழக்குளம், மேலக்குளம், மேற்கு கொட்டகுடி ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் தணிக்கை செய்யப்படுகிறது.

கோரிக்கைகள்

19-ந் தேதி தேரிருவேலி உள்வட்டத்தை சேர்ந்த தேரிருவேலி, பூசேரி, தாளியாரேந்தல், வளநாடு, இளங்காக்கூர், உலைïர், ஆதங்கொத்தங்குடி ஆகிய கிராமங்களுக்கும், 23-ந்தேதி காக்கூர் உள்வட்டத்தை சேர்ந்த காக்கூர், புளியங்குடி, பொசுக்குடி, கருமல், குமாரக்குறிச்சி, பிரபுக்களூர் ஆகிய வருவாய் கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடக்கிறது.

எனவே முதுகுளத்தூர் பகுதி பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை தாலுகா அலுவலகத்தில் மனுவாக கொடுத்து பயன்பெறலாம் என்று கலெக்டர் வாசுகி தெரிவித்தார்.