Thursday, January 22, 2009

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கல்விக்காக தனி வானொலி நிலையம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கல்விக்காக தனி வானொலி நிலையம்
துணை வேந்தர் கற்பககுமாரவேல் தகவல்


மதுரை,ஜன.23-

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கல்விக்காக தனி வானொலி நிலையம் தொடங்கப்படும் என்று துணை வேந்தர் கற்பக குமாரவேல் கூறினார்.

ரூ.30 கோடி நிதி

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் கற்பக குமாரவேல் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பல்கலைக்கழக மானியக்குழுவினரால் 2007-ம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆற்றல்சார் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது. இந்த குழுவினரால் 9 பல்கலைக்கழகங்கள் இவ்வாறு அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. பல்கலைக்கழக மானியக்குழு 5 ஆண்டுகளுக்கு ரூ.30 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. முதல் ஆண்டு ஒதுக்கீடாக ரூ.10 கோடியும், கூடுதலாக ரூ.5 கோடியும் வழங்கப்பட்டது.

பல்கலைக்கழக மானியக்குழுவின் துணைத் தலைவர் மூல்சந்த் சர்மா தலைமையில் ஒரு வல்லுனர் குழு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 23(இன்று), 24, 25 ஆகிய நாட்களில் பார்வையிட இருக்கிறது. இந்த குழுவில் இந்தியாவில் பல மாநிலங்களில் அமைந்துள்ள பல்கலைக்கழக பேராசிரியர்கள் இடம்பெற்று உள்ளனர்.

பல்கலைக்கழக மானியக்குழு ஒதுக்கிய நிதியின் கீழ் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்துள்ளது. மாணவர்களுக்கு பயன்படும் வகையில் நவீன வசதிகள் பொருந்திய கணினி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

11/2 கோடியில் கருவிப்பணி மையம்

அடுத்த ஆண்டுகளுக்கு சுமார் ரூ. 3 கோடியே 86 லட்சம் மதிப்புள்ள கருவிகள் வாங்குவதற்கும் சுமார் 11/2 கோடி ரூபாய் மதிப்பில் கருவிப்பணி மையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இது மாணவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் மிகவும் பயன்படும். ரூ.1 கோடியே 95 லட்சம் செலவில் ஒரு தகவல் மையம் உருவாக்கும் திட்டமும் உள்ளது. பல்கலைக்கழக ஒட்டு மொத்த வளர்ச்சிக்காக ரூ.56 லட்சம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு பயன்படும் சூழல்களை பல்கலைக்கழக வளாகத்தில் உருவாக்குவதற்காக ரூ.2 கோடி செல்விடப்பட உள்ளது. பொருளாதார அடிப்படையிலும், சமூக அடிப்படையிலும் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவும் வகையில் படிக்கும்போதே ஊதியம் பெறுதல் திட்டம் ரூ.25 லட்சம் செலவில் நடைமுறை படுத்தப்பட்டு, இதன் மூலம் பல மாணவர்கள் பயன்பெற்று உள்ளனர். பல்கலைக்கழக நிர்வாகம் ழுழுவதும் ரூ.1 கோடி செலவில் மின்னணு மயமாக்கப்பட உள்ளது.

ரூ.5 கோடியில் உள்கட்டமைப்பு

பல்கலைக்கழக துறைகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் அடுத்த 6 மாதங்களுக்குள் ரூ.5 கோடி செலவில் மேம்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் கட்டிடங்களை புதுப்பித்தல், குடிதண்ணீர் வசதியை பெருக்குதல், மின்இணைப்புகளை புதுப்பித்தல், மாணவர்களுக்கு தேவையான இருக்கை வசதி- உபகரணங்களை செய்து கொடுத்தல், தேவையான அளவுக்கு கணினி, மடிக்கணினிகளை வழங்குதல், வாகனங்களை நிறுத்தும் இடங்களை உருவாக்குதல் போன்ற வசதிகள் செய்யப்பட உள்ளன.

இந்திய அறிவியல் கழக அறக்கட்டளையின் 75-வது விருதுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. இயற்கை அறிவியல், இயற்பியல் போன்ற துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும், இந்த விருதுக்காக ரூ.30 ஆயிரம் பணமுடிப்பும், சான்றிதழும் வழங்கப்படும்,

கல்வி ஒலிபரப்பு சேவை

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகம் இணைந்து கல்வி ஒலிபரப்பு சேவையை தொடங்க உள்ளது. இந்த எப்.எம். வனொலி நிலையம் நமது பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்படும். இந்த வானொலி நிலையம் அமைப்பதற்கு தேவையான கருவிகள் ஏற்கனவே மதுரையில் உள்ள வானொலி நிலையத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்டு உள்ளன. இந்த ஒலிபரப்பு பல்கலைக்கழகத்தில் இருந்து 60 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கிடைக்கும். நாள்தோறும் 6மணி நேரத்திற்கு குறையாமல் இந்த சேவை ஒலிபரப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.