Friday, August 22, 2008

கல்லூரி மாணவனுக்கு உதவிய பள்ளி மாணவர்கள்

கல்லூரி மாணவனுக்கு உதவிய பள்ளி மாணவர்கள்


சிதம்பரம், ஆக. 21: பாலிடெக்னிக்கில் பயிலும் ஏழை மாணவரது படிப்பு செலவுக்கு சிதம்பரம் தில்லை கல்வி நிறுவன மாணவர்கள் வசூலித்த ரூ.3400-ஐ அளித்துள்ளனர்.

சிதம்பரம் குஞ்சமூர்த்தி விநாயகர் கோயில் தெருவில் வசிப்பவர் ஆர்.கலியபெருமாள் மகன் கே.ராஜா. இந்த ஈரோடு நந்தா பாலிடெக்னிக்கில் கல்வி பயின்று வருகிறார்.

இவரின் படிப்புக்காக, சிதம்பரம் தில்லை கல்வி நிறுவன மாணவ, மாணவிகள் ரூ.3400-ஐ வசூலித்தனர்.

இந்த உதவித் தொகையை அவரது பெற்றோரிடம் பள்ளித் தாளாளர் இரா.செந்தில்குமார் முன்னிலையில் தமிழாசிரியர் கே.நடனகுஞ்சிதபாதம் திங்கள்கிழமை அளித்தார்.

கல்வி உதவித் தொகைப் பெற கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித் தொகைப் பெற கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்


நாகப்பட்டினம், ஆக. 21: தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை மூலம் கல்வி உதவித் தொகைப் பெற தகுதியான கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை மூலம் 2008-09-ம் ஆண்டுக்குக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று; பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில்; எந்த உதவித் தொகையும் பெறாமல் இளங்கலை மற்றும் முதுகலை பட்டயப்படிப்பு, முதலாம் ஆண்டு கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி, மருத்துவம், டிப்ளமோ முடித்து 2-ம் ஆண்டு பொறியியல் பயிலுபவர்கள், பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும்.

நிகழாண்டில், 400 பேருக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படவுள்ளது.

முதலாம் ஆண்டு பட்டயப்படிப்புப் பயிலுபவர்களுக்கு ரூ. 4 ஆயிரம், முதலாம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை பட்டயப்படிப்புக்கு ரூ. 4,500, முதலாம் ஆண்டு தொழில் நுட்பப் படிப்புக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.

தகுதிகள்: சுமார் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.

உறைமேலிட்ட கவரில் சுய முகவரியைத் தெளிவாக எழுதி (உறை அளவு 22.5 செ.மீ 1 செ.மீ), ரூ. 10-க்கான தபால் தலை ஒட்டி, "கெüரவச் செயலர், தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை, ராஜா அண்ணாமலை பில்டிங், இணைப்புக் கட்டடம் 2-வது தளம், 18/3 ருக்மணி லெட்சுமிபதி சாலை, எக்மோர், சென்னை-8' என்ற முகவரிக்கு வரும் அக். 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே சிந்தனையில் இருத்தலே வெற்றிக்கு வழி: ஐஏஎஸ் தேர்வில் வென்றவர் பேச்சு

ஒரே சிந்தனையில் இருத்தலே வெற்றிக்கு வழி: ஐஏஎஸ் தேர்வில் வென்றவர் பேச்சு


புதுக்கோட்டை, ஆக. 21: ஒரே சிந்தனையில் இருத்தலே வெற்றிக்கு வழி என்றார் ஜெஜெ கல்லூரியின் முன்னாள் மாணவரும், ஐஏஎஸ் தேர்வில் வெற்றியடைந்து பயிற்சி பெறுபவருமான க. விஜயேந்திரபாண்டியன்.

புதுகை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊக்குவிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியது:

கடும் உழைப்புக்குப் பலன் நிச்சயம். மகிழ்ச்சி, ஆர்வம், ஈடுபாடு ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு படித்தால் மட்டுமே வெற்றி கிட்டும்.

ஐஏஎஸ் பதவி என்பது சாதாரணமானவர்கள் நினைத்தே பார்க்க முடியாதது, அது மேட்டுக் குடியினருக்கு மட்டுமே சொந்தம் என்பதெல்லாம் வெறும் கற்பனை.

ஐஏஎஸ் அகாதமியில் தற்போது பயிற்சியில் என்னுடன் இருக்கும் பெரும்பாலானவர்கள் சாதாரண அடித்தட்டு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த முதல் தலைமுறையினர். இவர்கள் உத்வேகத்துடன் படித்ததால்தான் வெற்றி பெற்றனர்.

கடின உழைப்பால் வெற்றி நேருக்கு நேராக கிடைக்கும். அந்த வெற்றியைச் சுவைத்துவிட்டால் பின் திரும்பிப் பார்க்கும் எண்ணம் வராது.

மொழி இந்தப் படிப்புக்குத் தடை இல்லை. தாய்மொழியில் இந்த தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் தற்போது அதிகம்.

முதலில் நம்மை நாம் மதித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நடை, உடை பாவனைகள் மாறும். ஒரு அதிகாரி என்பதை மனதில் பதிய வைத்திருக்க வேண்டும்.

தற்போது சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுத பரந்து விரிந்த களம் உங்கள் முன் உள்ளது. பணம் சேர்க்க எத்தனையோ படிப்புகள் உள்ளன. ஆனால் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கமிருந்தால் மட்டுமே இதில் இயல்பாகவும், எளிதாகவும் வெற்றி பெறலாம்.

பணம் என்றும் நம்மை வழி நடத்தும் கருவியாகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முதல் முறை தேர்ச்சி பெற்று நேர்காணலில் 7 மதிப்பெண் குறைந்ததால் தோல்வியடைந்தேன்.

ஆனால், அடுத்த முயற்சியில் ஐஆர்எஸ் பதவி கிடைத்தது. ஐஏஎஸ் என் லட்சியம் என்பதால் மீண்டும் முயற்சி செய்து இந்த ஆண்டு வெற்றி பெற்றேன். தன்னம்பிக்கையுடன் ஒரே சிந்தனையில் முயற்சி செய்ததால் இதை அடைய முடிந்தது.

படிக்க மனம் இருந்தால் போதும் உங்கள் தேடுதல் நிறைவேறும். மாணவர்கள் கூச்சத்தை தவிர்க்க வேண்டும், கூச்சமில்லாமல் இருப்பது தற்போது தனி திறமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. விடா முயற்சியே ஐஏஎஸ் கனவை நனவாக்கும் என்றார் விஜயேந்திரபாண்டியன்.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி நிர்வாக அறங்காவலர் கவிதாசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

முதல்வர் ஜெ. பரசுராமன் வரவேற்றார். பிபிஎம் இயக்குநர் சோலையப்பன் நன்றி கூறினார்.

சென்னையில் ஆக. 31-ல் மாரத்தான் போட்டி: முதல் பரிசு ரூ. 10 லட்சம்

சென்னையில் ஆக. 31-ல் மாரத்தான் போட்டி: முதல் பரிசு ரூ. 10 லட்சம்


நாகர்கோவில், ஆக. 21: சென்னையில் இம் மாதம் 31-ம் தேதி நடைபெற உள்ள மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என, கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு அலுவலர் செ. பால்சுதந்திரதாஸ் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ் மையம், குட்வில் கம்யூனிகேஷன்ஸ் அமைப்புகள் இணைந்து நடத்தும் கிவ் லைப் சென்னை மாரத்தான் ஓட்டப் பந்தயம் சென்னையில் இம் மாதம் 31-ம் தேதி நடைபெறவுள்ளது.

மொத்தம் 21.09 கி.மீ. தொலைவு கொண்ட இப் போட்டியில் இருபாலரும் பங்கேற்கலாம். முதல் பரிசாக ரூ. 10 லட்சமும், 2-வது பரிசாக ரூ. 5 லட்சமும், 3-வது பரிசாக ரூ. 2 லட்சமும், 4-வது பரிசாக ரூ. 1 லட்சமும், 5-வது பரிசாக ரூ. 50 ஆயிரமும், 6-வது பரிசாக ரூ. 25 ஆயிரமும், 7-வது பரிசாக ரூ. 15 ஆயிரமும், 8-வது பரிசாக ரூ. 10 ஆயிரமும், 9-வது பரிசாக ரூ. 5 ஆயிரமும், 10-வது பரிசாக ரூ. 3 ஆயிரமும், 11 முதல் 20-வது இடம் வரை பெறுவோருக்கு ரூ. ஆயிரமும் பரிசுத் தொகை வழங்கப்படும்.

இருபாலருக்கும் தனித்தனியே பரிசுகள் வழங்கப்படும். முதல் 20 இடங்களைப் பெறும் அனைவருக்கும் பதக்கம் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மாரத்தான் ஓட்டத்தில் சேர விரும்புவோர் பதிவுக் கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். கல்லூரி மாணவர்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ. 50. பள்ளி மாணவர்களுக்கு இலவசம். நிரப்பப்பட்ட படிவங்களை குட்வில் கம்யூனிகேஷன்ஸ், 68, லஸ் சர்ச் சாலை, மயிலாப்பூர், சென்னை-4 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் இதுகுறித்த கூடுதல் தகவல்களை நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட விளையாட்டு அலுவலரைத் தொடர்பு கொண்டு அறியலாம் என்றார் அவர்.

போலி தனியார் ஏஜென்சிகளை கட்டுப்படுத்தவே வெளிநாடுகளுக்கு ஆள்களை தேர்வு செய்யும் முகாம்: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இயக்குநர் பேட்டி

போலி தனியார் ஏஜென்சிகளை கட்டுப்படுத்தவே வெளிநாடுகளுக்கு ஆள்களை தேர்வு செய்யும் முகாம்: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இயக்குநர் பேட்டி

திருநெல்வேலி, ஆக. 21: போலி தனியார் ஏஜென்சிகளை கட்டுப்படுத்தவே வெளிநாடுகளுக்கு ஆள்களை தேர்வு செய்து அனுப்பும் முகாம் நடத்தப்படுவதாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இயக்குநர் பி.ஆர். பிந்துமாதவன் தெரிவித்தார்.

இதுகுறித்து திருநெல்வேலியில் வியாழக்கிழமை பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:

நாங்கள் வெளிநாடுகளுக்கு வீட்டு வேலைகள் தவிர இதர வேலைகள் அனைத்துக்கும் ஆள்களை தேர்வு செய்து அனுப்பி வருகிறோம்.

இதில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 6,800 பேரை வேலைக்காக பல்வேறு நாடுகளுக்கு தேர்வு செய்து அனுப்பி இருக்கிறோம். இந்தாண்டு இது வரை 300 பேரை தேர்வு செய்து அனுப்பி உள்ளோம். 340 பேரை அனுப்பும் தருவாயில் இருக்கிறோம்.

ஒமன், துபாய், குவைத், சவுதி அரேபியா, கத்தார் போன்ற அரேபிய நாடுகளுக்குத் தான் அதிகமாக ஆள்களை அனுப்பி வருகிறோம்.

இது தவிர சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் ஆள்களை அனுப்பி வருகிறோம். இதில் அமெரிக்க நாட்டுக்கும் ஆள்களை தேர்வு செய்து அனுப்பும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறோம்.

வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் எங்களிடம் கேட்பதை பொருத்து தான், ஆள்களை தேர்வு செய்து அனுப்புகிறோம்.

அந்த நிறுவனங்கள் ஒருவரின் அனுபவத்தையும், திறமையையும் பொருத்து ஊதியத்தை நிர்ணயம் செய்கின்றன. இதில் ஒரு நபருக்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை கட்டணமாக நாங்கள் வசூல் செய்கிறோம்.

ஆனால் இதற்கு தனியார் ஏஜென்சிகள் இரண்டரை லட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கின்றன.

பயணக் கட்டணம், உணவு வசதி, தங்கும் வசதி, என்.ஆர்.ஐ இன்சூரன்ஸ் போன்ற அனைத்து சலுகைகளும் எங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்படுகிறவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும் மத்திய அரசின் கீழ் உள்ள அயல்நாடு செல்வோர் காப்பாளர் மையத்தில் பதியாமலேயே தனியார் ஏஜென்சிகள் பல வெளிநாடுகளுக்கு பல்வேறு விதிமுறைகளை மீறி ஆள்களை அனுப்புகின்றனர். இப்படிப்பட்ட ஏஜென்சிகள் மூலம் அழைத்து செல்லப்படுவர்கள் தான், வெளிநாடுகளில் பிரச்னைகளில் சிக்கிக் கொள்கின்றனர்.

இப்படிப்பட்ட ஏஜென்சிகளின் ஏமாற்றுவேலைகளை கட்டுபடுத்ததான், நாங்கள் சென்னையில் இருந்து மாநிலத்தின் பிற பகுதிகளிலும் வெளிநாட்டுக்கு ஆள்களை தேர்வு செய்து அனுப்பும் முகாம்களை நடத்துகிறோம். இது வரை 13 முகாம்கள் நடத்தி இருக்கிறோம்.

மேலும் வெளிநாடுகளில் வேலை செய்ய விரும்புவோர், எங்களது நிறுவனத்தில் தனியாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

ஒமன் நாட்டில் ஒரு பெரிய கட்டுமான நிறுவனத்துக்கு கொத்தனார், டைல்ஸ், மார்பிள், பிளாக் ஒர்க்ஸ் வேலை செய்வோர், பிளாஸ்டரிங், கார்பெண்டர், பார்பெண்டர், எலக்ட்ரிசியன்கள், பிளம்பர்கள், என்ஜினீயர்கள் ஆகியோர் சுமார் 1,000 பேர் தேவைப்படுகிறார்கள். இதற்காக பாளையங்கோட்டையில் முகாம் நடந்தது.

மேலும், இந்தப் பணியிடங்களுக்கு இம் மாதம் 23-ம் தேதி ராமநாதபுரம், 24-ம் தேதி திருச்சி, 25-ம் தேதி ஆகிய இடங்களில் நடத்த உள்ளோம். இதேபோல பல இடங்களில் முகாம் நடத்த திட்டமிட்டு வருகிறோம் என்றார் பிந்துமாதவன்.