Wednesday, September 24, 2008

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். பயிற்சி: செப்.30க்குள் விண்ணப்பிக்கலாம்

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். பயிற்சி: செப்.30க்குள் விண்ணப்பிக்கலாம்

www.muduvaivision.com


ராமநாதபுரம், செப். 23: தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். பயிற்சி மையத்தில் சேர விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 30.9.08 என, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர். கிர்லோஷ் குமார் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

இது குறித்து, வெளியான செய்திக் குறிப்பு:

இயக்குநர் மற்றும் பயிற்சித் துறை இயக்குநர், அண்ணா மேலாண்மை நிலையம், அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ், சென்னை அண்ணா நகரில் இயங்கிவரும் அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையத்தில், இந்திய ஆட்சிப் பணி மற்றும் இந்தியக் காவல் பணிகளுக்காக நடத்தப்படும் பூர்வாங்கத் தேர்வு எழுத முழுநேரம், பகுதி நேரம் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இதர வகுப்பினரைச் சேர்ந்தோர் பட்டப்படிப்பு முடித்து, குறைந்தபட்சம் 21 வயது நிரம்பிய மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எனவே, நவம்பர் 9-ம் தேதி நடைபெறவுள்ள நுழைவுத் தேர்வுக்கு, சென்னை அண்ணா நகரிலுள்ள அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தின் முதல்வருக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள் 30.9.08.

இதற்கான நுழைவுத் தேர்வு, சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், சேலம், வேலூர், சிதம்பரம், திருநெல்வேலி, தஞ்சாவூர், தர்மபுரி, சிவகங்கை ஆகிய இடங்களில் நடைபெறும்.

மேலும் விவரங்கள் அறிந்துகொள்ள பயிற்சி மையத்தின் இணையதளம் www.civil sercice coaching.com என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரமக்குடியில் முஸ்லிம் அமைப்புகள் அமைதிப் பேரணி

பரமக்குடியில் முஸ்லிம் அமைப்புகள் அமைதிப் பேரணி


ராமநாதபுரம், செப். 23: பரமக்குடியில் மாணவர் இறந்தது தொடர்பாக, செவ்வாய்க்கிழமை முஸ்லிம்கள் பங்கேற்ற அமைதிப் பேரணி நடைபெற்றது.

பரமக்குடியில் செப். 18-ம் தேதி ராஜா மஸ்தான் (15) என்ற மாணவர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

இந்நிலையில், அவரைக் கொலை செய்தவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, பரமக்குடியில் முஸ்லிம்கள் அமைதிப் பேரணி நடத்தினர்.

பின்னர், வட்டாட்சியர் அண்ணாமலையிடம் மனு அளிக்கப்பட்டது. அதில், இறந்த மாணவர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.

முன்னதாக, பேரணியில் தமுமுக மாவட்டத் தலைவர் எஸ். சலிமுல்லாகான், பேச்சாளர் பாளை. ரபீக், மாவட்ட ஐக்கிய ஜமாஅத் செயலர் முகம்மது ஜமால், தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டச் செயலர் ஆரிப்கான், மனித நீதிப் பாசறை மாவட்டச் செயலர் ஜெமீல், உலமாக்கள் சபை மாவட்டத் தலைவர் வலியுல்லா நூரி, முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் பஜ்ருதீன், எமனேசுவரம் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் நகர்மன்ற உறுப்பினர் அப்துல் மாலிக், நூருல்அமீன், வழக்கறிஞர் கமால் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

பேரணிக்கு மாவட்ட எஸ்.பி. கே.ஏ. செந்தில்வேலன் மேற்பார்வையில், டி.எஸ்.பி. பெருமாள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பரமக்குடியில் முஸ்லிம் சமுதாயத்தினரின் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.