Friday, March 27, 2009

கடற்கரை நிறைந்த ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் கரையேறப்போவது யார்?

கடற்கரை நிறைந்த ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் கரையேறப்போவது யார்?

ராமநாதபுரம் மார்ச்.26


தமிழ்நாட்டிலேயே ஞிண்ட கடற்கரையை கொண்ட தொகுதி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி துவக்கத்தில் அருப்புக்கோட்டை லோக்சபா தொகுதி என்று அழைக்கப்பட்டது. இந்த தொகுதி 1957ம் வருடம் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியாக பெயர்மாற்றம் செய்யப்பட்டது.பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் போட்டியிட்ட பெருமையுடையது இந்த தொகுதி.

இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வ.ராஜேஸ்வரன் 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.அவரைத்தவிர வேறு யாரும் 2வது முறை கூட இந்த தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.இந்த தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 11 லட்சத்து 30 ஆயிரத்து 489.இதில் ஆண் வாக்காளர்கள் 5 லட்சத்து 58 ஆயிரத்து 14,பெண் வாக்காளர்கள் 5 லட்சத்து 72 ஆயிரத்து 475. தொகுதி மறு சீரமைப்புக்கு முன்பு ராமநாதபுரம்,பரமக்குடி தனி), மானாமதுரை, அருப்புக்கோட்டை,கடலாடி,முதுகுளத்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இந்த நாடாளுமன்ற தொகுதியில் இருந்தன.தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு ராமநாதபுரம்,பரமக்குடி(தனி),முதுகுளத்தூர்,திருவாடனை,அறந்தாங்கி,திருச்சுழி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

இந்த 6 சட்டமன்ற தொகுதிகளில் திருச்சுழி புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி.அந்த தொகுதியை தவிர மீதமுள்ள 5 தொகுதியிலும் திமுக கூட்டணியை சேர்ந்தவர்கள்தான் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.ராமநாதபுரத்தில் அசன் அலி(காங்),திருவாடனையில் ராமசாமி(காங்),முதுகுளத்தூரில் முருகவேல்(திமுக), அறந்தாங்கியில் உதயம் சண்முகம்(திமுக) ஆகியோர் உள்ளனர்.

இந்த தொகுதியில் அ.இ.பா.பி. கட்சி 5 முறையும்,காங்கிரஸ் 4 முறையும்,அஇஅதிமுக 3 முறையும்,திமுக 2 முறையும்,த.மா.கா ஒரு முறையும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த தொகுதியில் போட்டியிட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி,முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள் சுந்தரபாண்டியன், செ.முருகேசன், மாவட்ட துணை செயலாளர் ஜி.முனியசாமி,அன்வர்ராஜா,மாவட்ட அவைத்தலைவர் எஸ்.கே.ஜி.சேகர் உள்பட 67 பேர் சீட் கேட்டு தலைமை கழகத்தில் பணம் கட்டியுள்ளனர். கூட்டணி முடிவானவுடன் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என தெரிகிறது.

பா.ஜ.க.சார்பில் அந்த கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் போட்டியிடப்போவதாக அறிவித்து ஓசையின்றி பிரச்சாரத்தையும் துவக்கி விட்டார்.

திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன்,ரகுமான் கான்,சுப.த.சம்பத், பவானி ராஜேந்திரன்,ஜே.கே.ரித்தீஸ் ஆகியோர் சீட் கேட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுமானால் ஜே.எம்.ஆருண்,மயூரா ஜெயக்குமார்,சுப.உடையப்பன்,சோ.பா.ரெங்கநாதன் ஆகியோர் உட்பட பலர் சீட் கேட்டு வருகின்றனர்.

எல்லா சாதியை சேர்ந்தவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். 1952 மற்றும் 62ல் செட்டியார் சமூகத்தை சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.57ம் வருடம் அம்பலம் சாதியை சேர்ந்தவர் பாராளுமன்ற உறுப்பினராகவும்,67ல் ஒரு இஸ்லாமியரும்,72,84,89 மற்றும் 91,98,99ல் மறவர் சமூகத்தை சேர்ந்தவரும்,77ல் வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்தவரும்,80,2004ல் அகமுடையார் சமூகத்தை சேர்ந்தவரும்,96ல் கள்ளர் சமூகத்தை சேர்ந்தவரும் பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.ராமநாதபுரம் தொகுதி மக்கள் சாதி,மதங்களுக்கு அப்பாற்பட்டு, அரசியல் சூழ்நிலைக்கேற்ப ஆழ்ந்து சிந்தித்து தங்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுப்பவர்கள்.'

தமிழகத்தில் உள்ள பிற்பட்ட தொகுதிகளில் ராமநாதபுரம் தொகுதியும் ஒன்று.வற்றாத ஜீவநதிகளோ,வளம் கொழிக்கும் வயல்_வெளிகளோ இல்லாத பகுதி,தொழிற்சாலைகளோ வேலைவாய்ப்புகளோ அற்ற பகுதி.ஆனால் ''திரைகடலோடியும் திரவியம் தேடு''என்ற முதுமொழிக்கேற்ப வெளிநாடுகளுக்கு சென்று பொருளீட்டி வருகின்றனர்.மண்வளம் இல்லாவிட்டாலும் மன வளம் உள்ள தொகுதி இது.தமிழ்நாட்டில் உள்ள அரசியல் விழிப்புணர்வு கொண்ட தொகுதிகளில் இதுவும் ஒன்று.நாட்டு நலன்கருதி இத்தொகுதி மக்கள் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் தமிழகம் முழுவதற்குமான உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவே இருக்கும்.வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் இது எதிரொலிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.


சாதிவாரி வாக்காளர்கள்

முக்குலத்தோர்_2,79,874
தாழ்த்தப்பட்டோர்_254,882
மூஸ்லீம்கள்_1,85,302
யாதவர்கள்_1,45,909
முத்தரையர்கள்_79,873
நாயக்கர்கள்_19,943
நாடார்கள்_29,765
கிறிஸ்தவர்கள்_28,008
சௌராஷ்ட்ரா_17,487
வேளாளர்கள்_உடையார்_20,845
செட்டியார்_26,791
ரெட்டியார்கள்_12,368
பிள்ளைமார்_29,382

ராமநாதபுரம் லோக்சபா தொகுதி

1952 முதல் 2004ம் ஆண்டு வரை நடந்த ராமநாதபுரம் லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் விபரம்:

ஆண்டு பெயர் கட்சி

1952 ராமசாமி செட்டியார் பார்வர்டு பிளாக்
1962 முத்துராமலிங்கத்தேவர் பார்வர்டு பிளாக்
1964 காசிநாததுரை காங்கிரஸ்
1967 ஷெரீப் பார்வர்டு பிளாக்
1971 மூக்கையாதேவர் பார்வர்டு பிளாக்
1977 அன்பழகன் அதிமுக
1980 சத்தியேந்திரன் திமுக
1984 ராஜேஸ்வரன் காங்கிரஸ்
1989 ராஜேஸ்வரன் காங்கிரஸ்
1991 ராஜேஸ்வரன் காங்கிரஸ்
1996 உடையப்பன் த.மா.கா
1998 சத்தியமூர்த்தி அதிமுக
1999 மலைச்சாமி அதிமுக
2004 பவானி ராஜேந்திரன் திமுக