Saturday, December 27, 2008

பக்ரைனில் திறந்த வாகனங்களில் செல்ல தொழிலாளர்களுக்கு தடை

பக்ரைனில் திறந்த வாகனங்களில் செல்ல தொழிலாளர்களுக்கு தடை

பக்ரைன் நாட்டில் திறந்த கனரக வாகனங்களில் தொழிலாளர்களை வேலைக்காக அழைத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. இதற்கு இந்த வாரம் முதல் பக்ரைன் அரசு தடை விதித்து இருக்கிறது.

தொழில் நிறுவனங்கள் இதுபோல் தொழிலாளர்களை அழைத்துச்செல்லக் கூடாது என்றும், மீறி அழைத்துச்சென்றால் அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் பக்ரைன் அரசு எச்சரித்துள்ளது. மேலும் இதுபற்றிய விழிப்புணர்வு பிரசாரத்தையும் தொழிலாளர்களிடையே அரசு தொடங்கி இருக்கிறது. தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் தீவிர விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி இந்த தடை கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது

அயல்நாட்டு வேலை நிறுவன பதிவைப் புதுப்பிக்க புதிய திட்டம்

அயல்நாட்டு வேலை நிறுவன பதிவைப் புதுப்பிக்க புதிய திட்டம்

சென்னை, டிச. 26: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் தங்களது பதிவை புதுப்பிக்காதவர்களுக்கு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி, பதிவை புதுப்பிக்காதவர்கள் 1.1.2009-ம் தேதி முதல் 31.3.2009 வரை புதுப்பிக்கலாம். தங்கள் பதிவு எண், பணி தொடர்பான விவரங்கள், அனைத்துச் சான்றுகளின் இரண்டு நகல்கள் ஆகியவற்றுடன் ரூ. 112-க்கான வரைவோலையை இணைத்து அனுப்ப வேண்டும்.

வரைவோலையை OVERSEAS MANPOWER CORPORATION LTD என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் எடுக்க வேண்டும். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை-20 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.