Sunday, August 8, 2010

அழாதே அம்மா … அழாதே !

அழாதே அம்மா … அழாதே !
(கருவறையிலிருந்து ஒரு கடிதம்)
( பொற்கிழிக் கவிஞர். மு. சண்முகம், இளையான்குடி )


அம்மா ….!
என்னைக் கருவினில்
சுமப்பது போதாதென்று
உயிரிலும் சுமக்கும் …..
உத்தமியே …!
மண்காயப் பொறுக்காத
மழைவானப் புன்னகையே ..!
பிள்ளையின் நிழல் கூட …
முள்ளில் விழத் தாங்காத
பேரன்பே !

படுத்திருக்கும் என்
பாசக் கடலே …!
உன்னுள் இருந்துதான்
பேசுகிறேன் …!


உன் குருதி விதையின்
குழந்தைப் பூ
பேசுகிறேனம்மா …!
அழுகிறாயாமே …?
ஏனம்மா …?


உன் கண்ணீர்த்துளி பட்டு
என் இதயமெல்லாம்
கொப்புளங்கள் !


அழாதே … அம்மா ..!
அழாதா !

இன்ஷா அல்லாஹ்
ஒரு கருத்த இரவிலோ
நெருப்புப் பகலிலோ
நிச்சயம் வெளிவருவேன் !
வலித்தால் அழுவார்கள்
இது
வையக நிதி
ஆனால் …. நீ

பிரசவ வலி வரவில்லை
யென்று அழுகிறாயாமே …
பிரசவ வலி
இல்லையென்றால் ….
ஒரு கொடுமை,
உடனே …
ஆபரேஷன் என்று – சில
மருத்துவர்கள்
அறிவித்துவிடுவார்கள் !

அதோடு
இருபத்தி ஐயாயிரம் ரூபாய்
ரெடி பண்ணி வை என்றும்
சொல்லி விடுவார்கள் !

இவ்வளவு தொகைக்கு
எங்கே போவது?
என்ன செய்வது
என்று தானே …
உனக்கு வலி! வருத்தம்

நான் சுகமாய்
பிறக்க வேண்டும் !
அவ்வளவு தானே …!

உன் கண்ணீரைத் துடை
ஹக்கனை நினை !
இரண்டு ரக்அத் தொழு !
எல்லாம் நலமாகும்
எதுவும் ஜெயமாகும்
அழாதே …. அம்மா !
அழாதே !

பூமிக்கு நான்வந்து – உனக்குப்
புன்னகை சேர்க்கிறேன் உன்
பொழுதுகளில் சோகம்
படராமல் காக்கிறேன் !

நேரம் ஆகிறது !
கண்ணுறங்கப் போகிறேன் !
நேசம் வளர்ப்பவளே
உன்னையென்
நெஞ்சிலே சுமக்கிறேன்


இப்படிக்கு
உன் வயிற்று பிள்ளை

நர்கிஸ் ஜுன் 2010 இதழிலிருந்து
நர்கிஸ் நடத்திய போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கவிதை

No comments: