Tuesday, November 13, 2007

நவம்பர் 14 ..............

நவம்பர் 14 குழந்தைகள் தினம். இந்த இளந்தளிர்களின் தினத்தைக் கொண்டாடும் அதே வேளையில் இன்னொன்றையும் நினைவுகூர வேண்டும். அதே நவம்பர் 14 'உலக சர்க்கரை குறைபாடு' உடையவர்களின் தினமும் கூட. சர்க்கரை நோய் என்பது பெரியவர்களை ஆட்கொள்ளும் நோய் என்பதுதான் பரவலாக எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் இளந்தளிர்களையும் அது மிகவும் அலைக்கழிக்கும் என்பதுதான் உண்மை. பிறவியிலேயே அல்லது இளம் வயதிலேயே ஏற்படும் சர்க்கரை நோயுடன் போராடும் சிறியோரும் அவர்தம் பெற்றோரும் படும் தொல்லை அளவிலாதது.

ஆனால் இன்றைய நவீன மருத்துவத்தின் உதவியாலும் அந்நோயைப் பற்றிய அறிவைப் பெற்றிருப்பதாலும் இந்நோயைச் சமாளிப்பது சாத்தியமாகியிருக்கிறது.

"என்ன சாப்பிடுகிறீர்கள்? 'டீ' அல்லது 'காபி'? - நண்பர்கள் சிலர் நம் இல்லத்திற்கு வரும்போது வழக்கம்போல் வினவினால், "ஏதேனும் ஒன்று... ஆனால் சர்க்கரை இல்லாமல்..." என்று சிலர் சொல்லக் கேட்பது வழக்கமாகிவிட்டது. 40 வயதிற்கு மேலுள்ளவர்களில் பத்துப் பேரைச் சந்தித்தால் அதில் ஒருவருக்காவது இந்நோய் இருக்கிறது. இன்று அன்றாடம் எப்படி ஒருவருக்கொருவர் இரத்த அழுத்த
அளவை விசாரித்துக் கொள்கிறோமோ அதே போல் சர்கரையின் அளவைப் பற்றியும் விசாரித்துக் கொள்வதைப் பார்க்கிறோம். கடந்த 40 ஆண்டுகளில் பத்து மடங்காக உயர்ந்து காணப்படும் இந்நோய், வேறு சில நோய்களின் தாயாக அமைந்து விடுகிறது. இந்த நோயைப் பற்றிய அறிவு நோயுற்றிருப்பவருக்கு இருப்பது மட்டுமல்லாமல் அவரை நெருங்கி இருப்பவருக்கும் தேவை. முதலில் இது
ஒரு நோய்தானா என்ற வினா தொக்கி நிற்கிறது. இல்லை; இது ஒரு நோய் இல்லை - ஒரு குறைபாடு. எப்படி ஒருவருக்கு உடலுறுப்பு ஒன்றில் ஊனம் ஏற்படுகிறதோ அதேபோல்தான் இதுவும். இது தொற்று அல்ல. உள்ளுறுப்பில் ஏற்படும் ஓர் ஊனம். Diabetes mellitus என்ற முழுப் பெயருடன் குறிக்கப் படும் இந்தக் குறைபாடு, பழங்காலம் தொட்டே அறியப் பட்டு வந்திருக்கிறது. 'இனிப்பு நீர்", "மதுர நோய்", "சர்கரை நோய்", "நீரிழிவு நோய்" என்ற பல பெயர்களில் வழங்கப்பட்டு வருகிறது. Diabetes mellitus என்ற பெயர் ஏற்படக் காரணமான ஒரு (ருசிகர?) தகவல்:
பழங்காலத்தில் வைத்தியர்கள் தன்னிடம் வரும் நோயாளியின் நோயின் தன்மையறிய அவர்களின் சிறு நீரைச் சுவைத்துப் பார்ப்பதுண்டாம். இந்த நோய் உள்ளவர்களின் சிறு நீர் இனிப்பாக இருக்கக் கண்டு "இனிப்பான சிறுநீர்" எனப் பொருள்படும் Diabetes mellitus என்ற பெயரை இட்டனராம்! சர்க்கரை நோய் பொதுவாக இரண்டு வகைகளாகப் பிரிக்கப் படுகின்றன.

வகை I (Type - I):
Juvenile diabetes-- இள வயது சர்க்கரை நோய் அல்லது Insulin dependant diabetes mellitus (IDDM)- இன்சுலின் (செலுத்தத்) தேவைப் படும் சர்க்கரை நோய்.
வகை - II (Type - II):: Adult onset diabetes - முது வயது சர்க்கரை நோய் அல்லது- Non insulin dependant diabetes mellitus (NIDDM) இன்சுலின் (செலுத்தத்) தேவையில்லாத சர்க்கரை நோய்
மூன்றாவது வகையாக கர்ப்ப கால சர்க்கரை நோய் (gestational diabetes) - இது ஒரு தற்காலிகமான நிலை. சில பெண்களுக்கு இது ஏற்படக் கூடும். பேறு காலம் முடிந்ததும் சரியாகிவிடும். இது கிட்டத் தட்ட இரண்டாம் வகை போன்றதுதான்.

மேற்க்கண்டவை ஒரு பொதுவான பகுப்பு. இரண்டாம் வகையைச் சார்ந்தவர்களும் இன்சுலின் எடுக்க வேண்டிய நிலை வரலாம். இன்சுலின் என்றால் என்ன, அதை ஏன் செலுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது என்பது பற்றி ஒவ்வொரு வகையை விரிவாகக் காணும்போது விளங்கிக் கொள்ளலாம்.

முதலில் இந்த நோய் எப்படி ஏற்படுகிறது? நம் உடல் உள்ளுறுப்புகளில் ஒன்றான கணையத்தில் (pancreas) ஏற்படும் செயல்பாட்டு மாற்றம்தான் இதற்குக் காரணம். இந்தச் சுரப்பி, உணவு செரிக்கத் தேவையான சில இரசங்களைச் சுரப்பதோடு "இன்சுலின்" என்ற ஹார்மோனையும் சுரக்கிறது. நாம் சாப்பிடும் உணவு மூலம் பிற சத்துக்களும் கார்போ ஹைட்ரேட்டுகள் மூலம் உடலுக்கு - அதிலும் குறிப்பாக மூளைக்குத் தேவையான எரிபொருளான சர்க்கரையும் கிட்டுகின்றன. உடலுறுப்புக்களுக்கும் மூளைக்கும் செலவானது போக மீந்து நிற்கும் சர்க்கரையை என்ன செய்வது? இங்குதான் கணையத்திலிருந்து சுரக்கும் "இன்சுலின்" என்ற 'ஹார்மோன்' உதவுகிறது. அது இரத்தத்தில் மீந்திருக்கும் அதிகப் படியான சர்க்கரையை வேறு ஒரு பொருளாக (glycogen- கிளைக்கோஜன்) மாற்றி ஈரலில் சேமித்து வைக்க உதவுகிறது (பதார்த்தங்கள் மீந்துவிட்டால் 'வடாகம்' போடுவது மாதிரி!). அடுத்த உணவு கிட்டாத போதோ அல்லது உடலின் சக்தி செலவழிக்கப் படும்போதோ சேமித்து வைக்கப் பட்டிருக்கும் glycogen மீண்டும் சர்க்கரையாக மாற்றப் பட்டு உடலுறுப்புக்களுக்கு அளிக்கப் படுகிறது.

இப்படியான ஒரு செயல்பாட்டால் மீந்திருக்கும் சர்க்கரையை ஏதோ ஓர் காரணம் கொண்டு glycogenஆக மாற்றி சேமித்து வைக்க வகையில்லாதிருந்தால் இரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரை தங்கிவிடும். அப்படித் தங்கினால் வேண்டாத விளைவுகளை அது ஏற்படுத்தும். அது என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும்?

தொடர்ச்சிக்கு.... இங்கே. Part2 , Part3, Part4
கடந்த ஆண்டு எழுதிய இந்த கட்டுரை இணையத்தில் உள்ளன பார்வையிடவும்.


M.Hussainghani [ஹூஸைன்கனி] hussainghani@gmail.com

http://chittarkottai.com/kaayaa_pazhamaa/index.html

No comments: