Tuesday, November 13, 2007

அசன் தந்த இசைவு ...............

அசன் தந்த இசைவு


நான் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக அபிராமம் அருகில் உள்ள கீழக்குளம் என்ற கிராமத்தில் பணியாற்றியுள்ளேன். ( 1962 முதல் 1963 வரை ).இச்சிற்றூர் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது.இந்த ஒன்றியத்தின் தலைவராக இருந்தவர் அசன் முஹம்மது எம்.ஏ.பி.எல். அவர் அன்று என் மேல் கொண்ட அன்பை இன்றும் மாறாத வகையில் வைத்துள்ள மாமனிதர். ஊழலற்ற அரசியல்வாதி. ஊரார்க்கு உழைப்பதற்காகவே பிறவி எடுத்த பெருமகன். அன்பு, பாசம், அடக்கம், உயர்வு அனைத்தும் நிறைந்த இச்சால்புடையார் இன்றும் என்னை என் இல்லம் வந்து பார்த்துப் பாராட்டி அன்பு செலுத்திச் செல்வது வழக்கம். இவரின் உயர்ந்த ஒழுகலாறுகளால் இவருக்கு நம் நாட்டு அரசியலில் பதவி கிடைக்கா விட்டாலும் இவர் பிள்ளைகள் வெளிநாடுகளில் சிறப்பாக வாழ்கிறார்கள். அவர்களில் ஒருவர் எச். அசன் முஹம்மது எம்.ஏ. அவர்கள்.

ஒருநாள் வழக்கம் போல் இன் இல்லத்திற்கு வந்த அசன் முஹம்மது அவர்களிடம் என் துருக்கிப் பயணம் பற்றிக் கூரி, உங்கள் மகன் பணியாற்றும் இரகுமான் நிறுவனத்தின் கிளைகள் துருக்கியில் ஏதாவது இருக்குமா ? என்று கேட்டேன்.

நீங்கள் உலகமெல்லாம் தமிழ் வளர்ப்பதைக் கண்டு மகிழ்பவர்களில் தலையானவன் நான் எனபதை அறிவீர்கள். சாதாராண ஆரம்பப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி இன்று பி.எச்.டி. டாக்டர் பட்டம் பெற்று உயர்ந்த முன்னேற்றம் கண்டுள்ள உங்களுக்கு இன்ஷா அல்லாஹ் என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன். அபுதாபியிலுள்ள என் மகனுக்கு எழுதுகிறேன் என்றார்.

வருமுன் காக்க இரு மடல்கள்

சில நாள்கள் கழித்து அவரின் மகனிடமிருந்து எனக்கு மடல் வந்தது. அம்மடலில் கண்ட செய்தியாவது :

அசன் புதல்வர் விடுத்த நிசமனத்தின் நீட்டோலை

இறையருள் முன்னிற்க

பேரன்புள்ள ஐயா பெருங்கவிக்கோ அவர்களின் சமூகத்திற்கு அசன் முஹம்மது வரையும் மடல். நலம் தங்களின் நலனுக்கும் தங்களின் குடும்பத்தினரின் நலத்திற்கும் எல்லாம்வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவனாக இருக்கிறேன்.

தாங்கள் துருக்கி நாட்டிற்குச் செல்வது குறித்து என்னுடைய அத்தா அவர்கள் தெரியப்படுத்தி கடிதம் எழுதி இருக்கிறார்கள். அத்துடன் ஒரு தமிழ்க் கவிதையை கெளரவித்துப் பட்டங்கள் வழங்கும்பொழுது, அது ஒவ்வொரு தமிழனுக்கும் கிடைத்த பெருமையாக இருக்கும். குறிப்பாக தாங்கள் பெறும் பெருமை எங்கள் குடும்பத்தில் உள்ள ஓர் அங்கத்தினருக்கு கிடைக்கும் பெருமை என்று நினைத்து மகிழ்கிறேன். தங்களுடைய பயணங்கள் இனிது நடந்து முடிய என்னுடைய வாழ்த்துக்கள்.

தங்களின் துருக்கிப் பயணம், துருக்கி நாட்டில் குறைவாக இருப்பதாகக் கருதினாலும், வேறு உதவிகள் அங்கு உங்களுக்குத் தேவைப்பட்டால் துருக்கியில் இருந்து எனக்குத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

மற்றவை தங்களின் அன்பு மடல் கண்டு

தங்களின் அன்புள்ள

ஹஸன் அஹமத்

( துருக்கியில் பெருங்கவிக்கோ பயண நூலிலிருந்து ) 1992

No comments: