Wednesday, November 14, 2007

சவூதி அரேபியா வந்துள்ள இந்திய இளைஞர் பிரதிநிதிக்குழுமத்துக்கு ரியாத் தமிழ்ச்சங்கம் வரவேற்பு

இந்திய அரசின் சார்பில் சவூதி அரேபியா வந்துள்ள இந்திய இளைஞர் பிரதிநிதிக்குழுமத்துக்கு ரியாத் தமிழ்ச்சங்கம் கடந்த நவம்பர் 1ம் நாளில் சிறப்பான வரவேற்பு அளித்து மகிழ்ந்தது.

ரியாதின் லெ-ராயல் உணவகத்தில் நிகழ்வுற்ற இவ்வரவேற்பினை இந்திய இளைஞர் பிரதிநிதிக்குழுமத்தின் பன்னிரு உறுப்பினர்களும் அகமகிழ்வுடன் ஏற்றுச் சிறப்பித்தனர். இவர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள்; பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆவர். இக்குழுமத்தின் தலைவராக இருந்து புதுவை மாநில அரசின் கல்வி-இளைஞர்நலத்துறை அமைச்சர் M.O.F.H ஷாஜஹான் வழிநடத்தினார்.

சவூதி மன்னர் அப்துல்லாஹ்வின் இந்திய விஜயம் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் வெற்றிகரமாக அமைந்து இரு நாடுகளிடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாயின. அவற்றுள் பண்பாட்டுப் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் இளைஞர் பிரதிநிதிகளின் வருடாந்திர வருகைப்பரிமாற்றமும் ஒன்று. அதன்படி ஜூலை 2007ல் இந்தியாவுக்கு சவூதி இளைஞர் குழுமம் வருகைஅளித்திருந்தது. இப்போது இந்திய இளைஞர்களின் முறை.

விழாவில், சவூதி அரேபியாவுக்கான இந்தியத்தூதர் மேதகு M.O.H ஃபரூக் மரைக்காயர் இருநாடுகளுக்கிடையேயான பண்பாட்டுப் பரிமாற்றத்தின், கலாச்சார அறிதல்களின் தேவையையும், இருநாட்டு இளைஞர்களும் அடையவேண்டிய ஆழிய புரிந்துணர்வையும் வலியுறுத்திப் பேசினார். ரியாத் தமிழ்ச்சங்க செயற்குழுவினரின் சுய அறிமுகங்களுக்குப்பின் தலைவர் திரு. அ.சஜ்ஜாவுத்தீன் வரவேற்பினை ஏற்றுக்கொண்ட இளைஞர் பிரதிநிதிகளுக்கு சங்கத்தின் சார்பில் நன்றி நவின்றார். --

இக்குழுமத்தின் சவூதி அரசாங்க ஒருங்கிணைப்பாளர் திரு. சுலைமான் முஹம்மத் அல் ஸுவெஹைரி இந்தியர்களின் விருந்தோம்பலை; இரக்க மனப்பான்மையை சிலாகித்தார். இந்திய இளைஞர் பிரதிநிதி குழுமத்தில் ஒருவராக வந்திருந்த புதுவை தமிழ்ச் சங்கத்தின் இணைச்செயலாளர் திரு ஆதவன் அவர்கள் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் இந்த வரவேற்பளிக்கும் ஆவலை புகழ்ந்து பேசினார்.

சங்கத்தின் பொருளாளர் திரு.ஜஃபர் சாதிக் இவ்விழாவின் ஒருங்கிணைப்பில் திறனாற்றிட, இணைச்செயலர் திரு. விஜய்சுந்தரம் விழாவைத் தொகுத்தளித்துச் சிறப்பித்தார். இதே விழாவில் இந்திய பன்னாட்டு பள்ளியில் கடந்த வருடத்தில் மேல் நிலை வகுப்பில் 93.8 மதிப்பெண்கள் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த செல்வி சீனி ஹுசைனா சாஹுல் ஹமீது அவர்களை பாராட்டும் வண்ணமாக வருகை தந்திருந்த அனைவரும் இருக்கையிலிருந்து எழுந்து நின்று வாழ்த்தினர்.

முன்னதாக, திரு.சஜ்ஜாவுத்தீன் அவர்களால் இளைஞர் பிரதிநிதிக்குழுமத்தலைவர் அமைச்சர் திரு. M.O.H.F. ஷாஜஹானுக்கு பூங்கொத்து அளிக்கப்பட்டது.

sundaramvijay@hotmail.com

1 comment:

Anonymous said...

அன்பின் நண்பர் ஹிதாயத்,

இச்செய்தி கட்டுரையை எழுதியவர் ரியாத் தமிழ்ச்சங்க செயற்குழுவிலுள்ள நண்பர் இப்னு ஹம்துன் அவர்கள்.

வார்ப்பு இதழில் 'நிகழ்வுகள்' பகுதியிலும்
சங்கத்தின் மின்குழுமத்திலும் வெளியிடப்பட்டது