Sunday, November 4, 2007

கிழக்கின் திருமகள் --- சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.

கிழக்கின் திருமகள் --- சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.
================= ============================

"கிழக்கின் திருமகளே வருக" அப்படித்தான் பேநஸீர் ஸுல்ஃபிக்கார் அலி புட்டோ ஆசிஃப் அலி சர்தாரியின்
பாகிஸ்தான் மீள்வருகையை அந்த நாட்டுப்பத்திரிகைகள் தலைப்பிட்டு வரவேற்றன. இது அவர் எழுதிவெளியிட்டுள்ள சுய சரிதை நூலின் தலைப்புமாகும் (Daughter of the East).

ஆனால், அவரது எதிர்ப்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொண்டு ஐநூறுக்கும் மேற்பட்டோரை
காயப் படுத்திய இரத்தம் தோய்ந்த 'வரவேற்பை' அவருக்கு வழங்கி இருக்கிறார்கள். இதற்கு முன்பும் அவர் நாடு
திரும்பியது ஒரு வித்தியாசமான சூழ்நிலையில் தான் - தந்தை பூட்டொவை ஜெனரல் ஸியாவுல் ஹக்கின்
தூக்குக் கயிறுக்கு பரிதாபமாகப் பலிகொடுத்த - பறிகொடுத்த ச்சூழ்நிலையில்.

ஆனால், இம்முறை சுயமாகப் பிரகடனம் செய்து கொண்ட அஞ்ஞாத வாசம் துபையிலும் - லண்டனிலும்.
1996 ம் ஆண்டு இன்னொரு பரம அரசியல் எதிரி நவாஸ் ஷரீஃபிடம் தேர்தலில் தோற்ற பிறகு தொடர்ச்சியாக தொடரப்பட்ட ஊழல் வழக்குகள் அவரது மென்னியைப் பிடித்து நெறீக்க அதன் மூச்சுத்
திணறலிலிருந்து விடுபட - ஓடி ஒளிய மேற்கொள்ளப்பட்ட 'வனவாசம்' அது. அதிலிருந்து மீண்டு, மீண்டும்
தாயகம் திரும்பியுள்ளார். ஜனவரியில் நடக்கவிரூப்பதாகச் சொல்லப் படும் பொதுத் தேர்தலில் பங்கேற்று
மூன்றாவது முறையாகப் பிரதமராவார் என்பது சிலரது கணிப்பு. பலரது எதிர்பார்ப்பு.

ராணுவ உடை தன் உடலில் தொங்கிக் கொண்டிருக்கும் வரைதான், தான் ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க
முடியும் என்பது பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் பர்வேஷ் முஷ்ரஃபின் நம்பிக்கை. ஆனால் மக்கள் மத்தியில்
அதற்கு வரவேற்பு இல்லை. ஒன்றில் தளபதி அல்லது அதிபர். இரண்டும் சேர்த்து வேண்டாம் என்பது மக்கள்
நினைப்பு. அதிலும் 'இஸ்லாமிய தீவிரவாதத்தை' அடக்குகிறேன் பேர்வழி என்று அவர் அமேரிக்காவின்
'கோலுக்குஆடும் குரங்காக நர்த்தனமாடுவது மக்களிடம் ஏகப்பட்ட வெறுப்பை சம்பாதித்து வைத்திருக்கிறது.
என்வே முஷரஃப் செய்வது புலிச்சவாரி. என்றும் சாவாரி செய்து கொண்டிருக்க முடியாது. அதற்காக கீழே
இறங்க முயன்றால் புலி நிச்சயம் அடித்துக் கொல்லும்.

எனவே, ராணுவ உடையைக் களைந்து விட்டு அதிபராக ஆட்சி அதிகாரத்தில் தொடர முஷரஃபுக்க்குத்
தேவைப்பட்டது ஒரு ஜனநாயக முலாம் பூசப்பட்ட முகம். இருக்கும் பிரதமர் சவுக்கத் அஸீஸ் போதாது
அவருக்கு மக்கள் ஆதரவு இல்லை.

மக்கள் ஆதரவுள்ள் இரண்டு அரசியல் எதிரிகளில் நவாஸ் ஷரீஃபை விட பேநஸீர் தன் பொக்குக்கு
இசைவாக நடந்து கொள்வார் என்ற நினைப்பில், அதிப்பர் மிஷரஃப், சமீபத்தில் நாடு திரும்பிய முன்னாள்
பிரதமர் நவாஸ் ஷரீஃபை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி, அடுத்த விமானத்திலேயே நாடு
கடத்தி விட்டார். அதே சமயம் பேந்ஸீர் மீதிருந்த ஐந்து ஊழல் வழக்குகளில் அவருக்கு பொது மன்னிப்பு
வழங்கி, அதற்கோர் சிறப்பு அரசாணை பிறப்பித்து, பேநஸீ தடையின்றி நாடு திரும்ப வழி வகை செய்துள்ளார்

ஆனால் பொது மன்னிப்பு வழங்கும் அதிபரின் அரசாணை உச்ச நீதி மன்றத்தில் சட்டச்சவாலுக்கு உள்ளாகி
இருக்கிறது. பிரதமர் சவுக்கத் அஸீஸும் பேநஸீருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டாலும் பேநஸீர்
மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று கூறியுள்ளார். இது நான்
அடிக்கிற மாதிரி நடிக்கிறேன் நீ அழுகிற மாதிரி அழு என்கிற வகை நாடகமா என்று தெரியவில்லை.

அதிபர் முஷ்ரஃப் ஒரு மாநாட்டுக்காக கொழும்பு சென்று விட்டு நாடு திரும்பும் வேளை அவரது விமானம்
பாகிஸ்தானில் தரை இறங்க அனுமதிக்கக் கூடாது என்று அப்போது பிரதமராக இருந்த நவாஸ் ஷ்ரீஃப்
உத்தரவிட்டார். அந்தரத்தில் தொங்கிய முஷ்ரஃபுக்காக ராணுவம் கிளர்ந்தெழுந்து நவாசிடமிருந்து பிரதமர்
பத்வியைப் பறித்து முஷரஃபிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்தது. அதன் பிறகு அவரே முடிசூடா
மன்னராக - தள்பதியாக - அதிபராக இன்று வரை நீடிக்க்கிறார்.

நவாஸ் மீது ஊழல் வழக்குகள் தொடரப்பட்டு தண்டனையும் வழங்கப் பட்டது. பிறகு சவூதி அரச குடும்பத்தின் தலையீட்டால் நவாஸ் நாட்டை விட்டு வெளியேறி சவூதியில் வசிப்பார் - பாகிஸ்தான் திரும்ப
மாட்டார் என்கிற வகையில் ஒரு சமரசத் தீர்ப்பாகி மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலையாகி நாட்டைவிட்டும்
வெளியேறினார் என்பது குழம்பிய குட்டையான பாகிஸ்தான் அரசியலின் உட்-கதை உப-கதைகளில் ஒன்று.

பாகிஸ்தானில் மக்கள் ஆதரவுள்ள தலைவர்கள் என்று கருதப்படும் பேநஸீரும் நவாஸ் ஷரீஃபும் அதிபர்
முஷ்ரஃபைப் பொறுத்த வரை அவரது அரசியல் சதுரங்க விளையாட்டில் பகடைக் காய்கள் மட்டுமே.
எதை பலி கொடுப்பார் எதை பாதுகாப்பார் என்பது கூட அவருக்கே தெரியுமோ என்னவோ !!!

முஷரஃபை பொது எதிரியாகக் கருதி பேநஸீரும் நவாசும் ஒன்று சேர்வார்களென்று எதிர்பார்க்கப்பட்டது.
இது தொடர்பாக அவர்கள் ஜெத்தா - துபை - லண்டன் ஆகிய நகரங்களில் சந்தித்து அந்தரங்கமாக பலமுறை
பேசவும் செய்தாகள். ஆனால் இப்போது ஒன்று சேர்ந்திருப்பது பேநஸீரும் முஷரஃபும் ! அரசியலில் நிரந்தர
நண்பர்களும் கிடையாது, நிரந்தரப் பகைவர்களும் கிடையாதூ. சுயநலம் ஒன்றே நிரந்தரம் என்கிற பழஞ்சொல்
மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி இருக்கிறது.

1953 ஜூன் மாதம் 21ம் தேதி பாஅகிஸ்தானின் ஒரு மிகப் பெரிய நிலப் பிரபுத்வ ஜமீன் குடும்பத்தில் பிறந்த
பேநஸீர் இங்கிலாந்தில் ஒக்ஸ்ஃபோர்ட் மற்றும் அமெரிக்காவில் ஹாவர்ட் பல்கலை கழகங்களுக்கு வர்த்தகப்
படிப்புக்காக அனுப்பட்டார். அப்போது அரசியல் சாயமோ அல்ல்து சாயலோ அவர் மீது படர்ந்திருக்கவில்லை.

ஆனால் 1977ல் பதவி பறிக்கப் பட்டு 1979ல் அவர் தந்தை தூக்கிலிடப்பட்ட அந்தக் கொடிய சம்பவம் முப்பது
வயதைக் கூட எட்டியீராத அந்த இளம் பெண்ணின் வழ்க்கையையே தலை கீழாகத் திருப்பிப் போட்டுவிட்டது
அரசியல் அவரது உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு வகை வெஞ்சினத்துடன் வந்து ஒட்டிக்கொண்டது.

படிப்பை ல்லாம் கை விட்டு விட்டு தன் தந்தையைக் கொன்ற ஸியாவுல் ஹக்கை மூர்ர்க்கமாக எதிர்க்கும்நோக்கத்துடன் 1986ல் நாடு திரும்பினார். பெருச்சாளியை நசுக்கிய பருந்துக்கு சுண்டெலியை
நசுக்குவதொன்றும் பெரீய காரியமல்ல. ஆனால் பேநஸீருக்கு இருந்த மக்கள் ஆதரவும் அனுதாபமும்
ஹக்கை யோசிக்கவும் - நிதானிக்கவும் வைத்தன.

எதிபார்த்தது போலவே இரண்டே ஆண்டுகளில் பேநஸீர் பாகிஸ்தானின் பிரதமராக அரியணை ஏறினார்.
அப்போது முப்பத்தைந்து வயதே ஆகியிருந்த பேநஸீர் உலகிலேயே இளம், அதிலும் முதல் முஸ்லீம்
பிரத்மர் என்கிறபேற்றையும் பெற்றார்.

ராணுவத்துடன் சுமுகப் போக்கு இல்லை - மோதல் போக்கே நீடித்தது. எனினும் மக்கள் ஆதரவால் 1993ல்
மீண்டும் பிரதமரானார். ஆனால் சோகங்கள் அவரைச் சூழ்ந்தன. அவரது மூத்த ச்கோதரன் முர்த்துஸா
காவல் துறையோடு நடந்த ஒரு மோதலில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இளைய ச்கோதரன்
ஷா நவாஸ் ஃபிரன்சில் வைத்து ஏற்கனவேயே மர்மமான சூழ்நிலையில் இறந்து போயிருந்தார்.

முர்த்துஸாவின் கொலையில் அதிபர் ஃபாரூக் லெகரியின் கரும் கைகளுக்கு பெருத்த பங்குண்டு என்று
பேநஸீர் குற்றம் சுமத்தினார். அதற்கு லெகரியிடமிருந்து வந்த பதில் பேநஸீரின் பத்வி நீக்கம். தொடர்ந்து
நடந்த தேர்த்லில் நவாஸ் ஷரீஃப் பதவிக்கு வந்தார். பேநஸீர் மீதும் அவர் கணவர் ஆசிஃப் அலி சர்தாரி
மீதும் ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள். வழக்கு - விசாரணை - தண்டனை என்கிற சம்பிரதாயங்கள் தொடர
கணவர் மாட்டிக் கொள்ள பேநஸீர் 1999ல் நாட்டை விட்டும் வெளியேறி விட்டார்.

எட்டு நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, கணவர் சர்தாரியும் மக்களும் துபையிலேயே தங்கிவிட, இளைய
ச்கோதரி சனம், மற்றும் உறவினர்கள், நண்பர்கள் சகிதம் 'கிழக்கின் திருமகள்' தாயகம் திரும்பி இருக்கிறார்.

நவாஸ் ஷரீஃபும், தான் ஒரு முறை பலவந்தமாக திருப்பி அனுப்பப் பட்டும் மீண்டும் வரப்போவதாக
அறிவித்திருக்கிறார். ஜனவரியில் பொதுத் தேர்தல் வரலாம் ன்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. பேநஸீருக்கு
மக்கள் ஆதரவு இருக்கிறது. நவாசுக்கு மக்கள் மத்தியில் நிறைந்த அனுதாபம் இருக்கிறது. ஆனால்
முஷ்ரஃபின் ஆதரவும், அனுசரணையும் பேநஸீர் பக்கம் இருக்கின்றன. ஆனால் முஷ்ரஃபுக்கு மக்கள் செல்வாக்கு
அதிகம் இருப்பதாகச் சொல்ல முடியாது. அதிலும் மார்க்க அறிஞர்கள் மத்தியில் நிறையவே கெட்ட
பெயரைத் தேடிக் கொண்டிருக்கிறார். பாகிஸ்தானின் மார்க்க அறிஞர்கள் என்பது ஒரு மிகப் பெரிய
அரசியல் சக்தி - உறுமாமல் இருக்கும் எரிமலை.

முஷரஃப் பல அரசியல் சவால்களைச் சந்தித்திருக்கிறார் - சமாளித்திருக்கிறார். அதைவிட முக்கியமாக
பல கொலை முயற்சிகளிலிருந்து நூலிழையில் தப்பிப் பிழைக்குமளவுக்கு அதிர்ஷ்டம் அவருக்குக் துணை
நின்றிருக்கிறது. எப்போதும் துணை நிற்குமா என்பது 64,000 டாலர் கேள்வி.

ஒரு நாட்டின் தலைவிதி அந்தந்த நாட்டின் தலலவர்களைப் பொறுத்து அமையும் என்பார்கள்.பாகிஸ்தானின்
தலை விதி எப்படி அமையப் போகிறதோ ? ஆண்டவன் தான் அந்த நாட்டையும் அதன்
மக்களையும் அதன் தலைவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும்

No comments: