Monday, March 30, 2009

அரசு பஸ்களில் அவமதிக்கப்படும் ஊனமுற்றோர்'

அரசு பஸ்களில் அவமதிக்கப்படும் ஊனமுற்றோர்'


அரியலூர், மார்ச் 29: தமிழக அரசு ஊனமுற்றோருக்கென சலுகை கட்டணம் விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால் அரசு பஸ்களில் ஊனமுற்றோர்கள் கட்டணச் சலுகை கேட்டால் நடத்துநரால் அவமதிக்கப்படுகிறார்கள். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அரியலூர் மாவட்ட ஊனமுற்றோர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்ட ஊனமுற்றோர் சங்கக்கூட்டம் அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்கத் தலைவர் இரா. குணசேகரன் தலைமை வகித்தார். சங்க ஆலோசகர் ந. சுகுமார், சங்க பொருளர் க. கனகசபை, மாவட்ட துணைத் தலைவர் மு. ஷேக்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், சங்கப்பணத்தில் கையாடல் செய்த மாவட்ட துணைச் செயலர் ஆ. ஜெயபாலை நீக்குவது, ஊனமுற்றோர்க்கு மாவட்ட மகளிர் திட்டத்தின் மூலம் ரூ 10 ஆயிரம் மானியத்துடன் வங்கி கடன் வழங்க பரிந்துரை செய்த மாவட்ட மகளிர் திட்ட அலுவலரை பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலராக அரியலூரைச் சேர்ந்த ரா.அன்பழகன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

மாவட்ட செயலர் மா.ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலர் கா.சுரேஷ் நன்றி கூறினார்.

No comments: