Saturday, August 16, 2008

மண்ணெண்ணெய் விளக்கொளியில் பள்ளிப்பாடங்களை படித்தேன்: பிரதமர்

மண்ணெண்ணெய் விளக்கொளியில் பள்ளிப்பாடங்களை படித்தேன்: பிரதமர்


புதுதில்லி, ஆக. 15: சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் திடீரென தனது சிறுவயது கால ஞாபகம் வரவே தான் வாழ்ந்த கிராமத்தின் நினைவில் ஆழ்ந்தார். இரவு நேரத்தில் பள்ளிப்பாடங்களை மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்ததாகவும் தெரிவித்தார்.

சிறுவயதில் தான் பட்ட சிரமங்களை சுட்டிக்காட்டிப் பேசினார். அவர் கூறியதாவது:

பிரிவினைக்கு முந்தைய ஒன்றுபட்ட இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தது எனது பட்டிக்காட்டு கிராமம். 10 வயதாகும் வரை நான் பட்ட சிரமங்கள் ஏராளம். எனது கிராமத்தில் அப்போது மின்சாரம் இல்லை, குடிநீர் வசதி இல்லை, டாக்டர் இல்லை, சாலைகள் இல்லை, தொலைபேசி வசதி இல்லை. இரவு நேரத்தில் மண்ணெண்ணெய் விளக்கில் கிடைக்கும் அரைகுறை வெளிச்சத்தில் எனது பாடங்களை படிப்பேன். ஆனால் நாடு விடுதலை பெற்றபிறகு கிராமப்புறங்களில் கணிசமாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் இன்னும் பல இடங்களில், நான் சிறு வயதில் பட்டது போன்ற சிரமங்களை, எத்தனையோ பேர் அனுபவிக்கின்றனர். அதனால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்றவுடன் இந்த நிலைமையை மாற்ற முற்பட்டது. பாரத் நிர்மாண் போன்ற நல்ல பல திட்டங்களை மேற்கொண்டது.

கிராமங்களை புனரமைக்கும் நோக்கில் அடிப்படை வசதிகளை மேற்கொள்வது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம்.

கிராமப்புற இந்தியாவின் தோற்றத்தை முழுமையாக மாற்றுவதே இந்த அரசின் லட்சியம். இதை கட்டாயம் நிறைவேற்றிக் காட்டுவோம். கடந்த 4 ஆண்டுகளில் பல முக்கிய முன்முயற்சிகளை எடுத்துள்ளோம்.

இந்த அரசின் முயற்சிகளால் புதுமைமிக்க வளமான இந்தியா உருவாகப் போவது உறுதி என்றார் மன்மோகன் சிங்.

No comments: