Saturday, August 16, 2008

தபால் பின்கோடு எண்கள் ரத்தாகின்றன - புதிய குறியீட்டு எண்ணை கொண்டு வர அஞ்சல்துறை முடிவு

தபால் பின்கோடு எண்கள் ரத்தாகின்றன - புதிய குறியீட்டு எண்ணை கொண்டு வர அஞ்சல்துறை முடிவு


சென்னை, ஆக.16-

ஒவ்வொரு ஊர்களுக்கும் உரிய தபால் நிலைய பின்கோடு எண்களை மாற்றி, `பேல்' என்ற புதிய குறியீட்டை பயன்படுத்த அஞ்சல்துறை முடிவு செய்துள்ளது.

பின்கோடு நம்பர்

தபால்களை பட்டுவாடா செய்வதற்கு எளிதாக இருக்கும் வகையில் நாட்டின் பகுதிகளை அஞ்சல்துறை குறியீடுகளாக வைத்துள்ளது. 6 எண்கள் கொண்ட இந்த குறியீடுகள் போஸ்டல் இன்டக்ஸ் நம்பர் (பின்) அதாவது பின்கோடு நம்பர்கள் என்றழைக்கப்படுகின்றன.

நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ கடிதம் எழுதும் போதும், வேலைக்காக விண்ணப்பிக்கும் போதும், மற்றவரிடம் ஒரு விலாசத்தை கொடுக்கும் போதும் `பின்கோடு' எண்களை எழுதுவது என்பது தற்போது அவசியமாகிவிட்டது. இந்தியாவில் 1972-ம் ஆண்டு `பின்கோடு' நம்பர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது.

8 பிரிவுகள்

பின்கோடு எண்கள் குறியீட்டின் முதல் எண்ணை வைத்து இந்தியாவை தபால்துறை மொத்தம் 8 பிரிவுகளாக பிரித்துள்ளது.

1) டெல்லி, அரியானா, பஞ்சாப், இமாச்சலபிரதேசம், ஜம்மு காஷ்மீர், சண்டிகார். 2) உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட். 3) ராஜஸ்தான், குஜராத், டாமன், டைï 4) சத்தீஸ்கர், மராட்டியம், மத்தியபிரதேசம், கோவா. 5) ஆந்திரபிரதேசம், கர்நாடகா. 6) கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, லட்சத்தீவுகள். 7)மேற்கு வங்கம், ஒரிசா, அசாம், சிக்கிம், அருணாசலபிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேகாலயா, அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள். 8) பீகார், ஜார்கண்ட்.

6 எண்கள்

பின்கோடு எண்களில் உள்ள மொத்தம் 6 எண்களில் முதல் எண் இந்தியாவில் உள்ள மண்டலம், அடுத்து உள்ள எண் துணை மண்டலத்தையும், அதைத் தொடர்ந்து உள்ள எண் அந்த மண்டலத்தில் உள்ள ஒருங்கிணைக்கப்பட்ட மாவட்டத்தையும், அதற்கு அடுத்துள்ள 3 எண்கள் அங்குள்ள தபால் நிலையங்களையும் குறிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, சென்னையில் `600001' என்ற பின்கோடு எண்கள் பூக்கடை, ஸ்டான்லி ஆஸ்பத்திரி, மண்ணடி, முத்தையால்பேட்டை, ஏழுகிணறு ஆகிய தபால் நிலையங்களையும், `600002' என்பது, அண்ணாசாலை தலைமை தபால் நிலையம், சிந்தாதிரிப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள தபால் நிலையங்களையும் குறிப்பதாக உள்ளது.

எளிதாக அறியலாம்

இந்த நிலையில், பின்கோடு நம்பர்களை பயன்படுத்துவதில் உள்ள சிரமங்களை கணக்கில் கொண்டு இந்திய அஞ்சல்துறை `போஸ்டல் அட்ரஸ் லொகேட்டர்' (பேல்) என்ற தபால் விலாச குறியீடுகளை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. பின்கோடு நம்பர்களை பொறுத்தவரை தபால் நிலையத்தை வைத்தே அந்த பகுதி, பின்கோடு எண்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் `பேல்' குறியீடுகள் அதில் இருந்து மாறுபட்டு, ஒவ்வொரு இடத்தையும் ஒரு குறியீட்டால் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்தியாவில் ஒரு மாவட்டம் என்பது நிர்வாக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் பின்கோடு எண்களை பொறுத்தவரை, மாவட்டம் என்பதற்கு குறியீடுகள் எதுவும் தரப்படவில்லை. ஆனால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள தபால் விலாச குறியீடுகளில் (பேல்) கிராமம், டவுண், இடம், கட்டிடம், தெரு, சாலை, பகுதி, நகரம் என அனைத்தும் குறிக்கப்படும். இதனால் குறியீடுகளில் இருக்கும் எண்கள் மூலமாகவே இருக்கும் இடத்தை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

2, 3 மாதங்களில் அமல்

தபால்காரர்கள் கடிதங்களை கொண்டு செல்வதற்கான முகவரியை அறிந்து கொள்ள இந்த புதிய முறை வசதியாகவும், சுலபமானதாகவும் இருக்கும். கடிதங்களை பின்கோடு எண்களை பார்த்து குறிப்பிட்ட தபால் நிலையத்திற்கு அனுப்பி அங்கிருந்து சென்று சேரவேண்டிய இடத்துக்கு கொண்டு சேர்ப்பதை விட, `பேல்' முறை மிகவும் எளிதானது என்று அஞ்சல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ``இந்த புதிய தபால் விலாச குறியீடுகள் இந்திய அஞ்சல்துறையில் அறிவுசார் சொத்துரிமை. இதை இந்திய அஞ்சல்துறையின் அனுமதியின்றி மற்ற நாடுகளின் தபால்துறை பயன்படுத்த முடியாது. தபால் துறை மிகப்பெரிய மாற்றத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. அதற்காக ஒருங்கிணைந்த தபால் துறை சாப்ட்வேர்கள், ஒன்றிணைக்கப்பட்ட தபால் நிலையங்கள், ஜி.பி.எஸ். வசதி கொண்ட மெயில் வேன்கள் ஆகியவை தேவைப்படுகின்றன. இன்னும் 2, 3 மாதங்களில் தபால் விலாச குறியீடுகள் அறிமுகப்படுத்தப்படும்'' என்று தெரிவித்தார்.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=432360&disdate=8/16/2008

No comments: