Thursday, August 7, 2008

தேசிய சேவை தொண்டர்கள் சமூக மாற்றங்களுக்கு தங்களை அர்ப்பணிக்க வேண்டும்

தேசிய சேவை தொண்டர்கள் சமூக மாற்றங்களுக்கு தங்களை அர்ப்பணிக்க வேண்டும்
காந்திகிராம பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் வேண்டுகோள்


சின்னாளப்பட்டி, ஆக.7-

தேசிய சேவை தொண்டர்கள் சமூக மாற்றங்களுக்கு தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்று காந்திகிராம பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் வில்லியம் பாஸ்கரன் கூறினார்.

12 நாள் பயிற்சி

காந்திகிராம பல்கலைக்கழகத்தில் உள்ள தகவல் வளர்ச்சி மற்றும் கருத்தாக்க மையமான `இடாரா` அமைப்பும், மத்திய அரசின் நேரு இளையோர் மைய மண்டலம் தமிழ்நாடு, புதுச்சேரி, சென்னை ஆகியவை இணைந்து தேசிய சேவை தொண்டர்களுக்கான 12 நாள் பயிற்சியை நடத்தியது.

இந்த முகாமில் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 30 தேசிய சேவை தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பயிற்சியின் நிறைவு நாள் விழா காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு `இடாரா` மையத்தின் இயக்குனர் பேராசிரியர் சிவராமன் தலைமை தாங்கி பேசினார்.

விழாவில் பயிற்சி பெற்ற சேவை தொண்டர்களுக்கு சான்றிதழ் வழங்கிய பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினரும், காந்திய சிந்தனை மற்றும் அமைதி அறிவியல் துறையின் தலைவரான பேராசிரியர் வில்லியம் பாஸ்கரன் கலந்து கொண்டு பேசியதாவது:-

அர்ப்பணிக்க வேண்டும்

சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக கிராமத்தில் உள்ள பொது மக்கள் விழிப்புணர்வு இல்லாமல் பல்வேறு சிக்கல்களில் மாட்டி தவிக்கின்றனர். சாதி, மத மோதல்களும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

இதையெல்லாம் மாற்றி சிறந்த குடிமக்களாக, மக்களை மாற்ற வேண்டும் என்றால், இன்றைய இளைஞர்கள் எளிய வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். மேலும் தேசிய சேவை தொண்டர்களாக மாற உள்ளவர்கள் சமூக மாற்றங்களுக்கு தங்களது சேவையை அர்ப்பணிக்க வேண்டும்.

இவ்வாறு வில்லியம் பாஸ்கரன் கூறினார்.

நிகழ்ச்சியில் தேனி மாவட்ட நேரு இளையோர் ஒருங்கிணைப்பாளர் சுந்தரமகாலிங்கம், திண்டுக்கல் ஒருங்கிணைப்பாளர் விஜயா, இடாரா உதவி திட்ட இயக்குனர் முத்துச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments: