Thursday, August 7, 2008

தமிழில் ரெயில்வே கால அட்டவணை வெளியீடு

தமிழில் ரெயில்வே கால அட்டவணை வெளியீடு
முக்கியமான ரெயில் நிலையங்களில் கிடைக்கிறது


சென்னை, ஆக.6-

ரெயில்வே கால அட்டவணை தமிழில் வெளியிடப்பட்டு உள்ளது. ஒன்றின் விலை 30 ரூபாய்.

தமிழில் ரெயில்வே கால அட்டவணை

ரெயில்வே கால அட்டவணை ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 1-ந் தேதி வெளியிடப்படுகிறது. ஜுலை மாதம் முதல் அடுத்த ஆண்டு ஜுன் மாதம் வரை கால அட்டவணை அமலில் இருக்கும். இந்த ஆண்டு, அகில இந்திய அளவில் ஓடும் ரெயில்களுக்கான கால அட்டவணையும் (விலை 35 ரூபாய்), தென்மண்டலங்களுக்கான கால அட்டவணையும் (விலை 30 ரூபாய்) வெளியிடப்பட்டு உள்ளது.

தெற்கு ரெயில்வே சார்பில் தென் மண்டலங்களுக்கான கால அட்டவணையை (ஆங்கில பதிப்பு) சென்னையில் கடந்த மாதம் 1-ந் தேதி ரெயில்வே இணை மந்திரி ஆர்.வேலு வெளியிட்டார். அப்போது, தமிழில் ரெயில்வே கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று அவர் அறிவித்தார்.

அதன்படி, தமிழில் ரெயில்வே கால அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. இதில், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரெயில்வே, செகந்திராபாத்தில் உள்ள தென்மத்திய ரெயில்வே, கர்நாடக மாநிலம்-ஊப்ளியை தலைமையிடமாகக் கொண்ட தென்மேற்கு ரெயில்வே, மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கொங்கன் ரெயில்வே ஆகிய 4 மண்டலங்களில் ஓடும் ரெயில்களைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் தமிழில் தெளிவாக தொகுத்து தரப்பட்டு உள்ளன.

4 மண்டல ரெயில்களின் விவரம்

தமிழ் ரெயில்வே கால அட்டவணையில், அதனைப் பயன்படுத்தும் முறை, ரெயில்கள் போய்ச் சேரும் இடங்கள், ரெயில்களின் பட்டியல், தென்மண்டலத்தில் உள்ள 4 மண்டலங்களிலும் ஓடும் ரெயில்கள், மீட்டர் கேஜ், அகல பாதை மற்றும் கொங்கன் ரெயில்வேயில் ஓடும் ரெயில்கள், ராஜதானி, சதாப்தி, ஜன்சதாப்தி, சம்பர்க் கிராந்தி, கரீப் ரத் (ஏழைகள் ரதம்) போன்ற முக்கிய ரெயில்களின் கண்ணோட்டம் ஆகியவை பல்வேறு வண்ணத்தில் அழகாக அச்சிடப்பட்டு உள்ளன.

இதுபற்றி தெற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி நீனு இட்டேரா கூறியதாவது:-

5 ஆயிரம் பிரதிகள்

தென் மண்டலங்களுக்கான ரெயில்வே தமிழ் கால அட்டவணை முக்கியமான ரெயில் நிலையங்களில் கிடைக்கும். முதல்கட்டமாக 5 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தேவைக்கேற்ப மேலும் அச்சிட்டு விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தென்மண்டல ரெயில் போக்குவரத்து தொடர்பான அனைத்து தகவல்களையும் பயணிகள் எளிதில் படித்து தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ் கால அட்டவணை தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில் ஏதாவது குறைகள் இருந்தால் ரெயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரும்படி பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: