Sunday, December 21, 2008

நடிகர்களிடம் நாடு என்ன தெரிந்து கொள்ளப் போகிறது?: சிலம்பொலி செல்லப்பன் கேள்வி

நடிகர்களிடம் நாடு என்ன தெரிந்து கொள்ளப் போகிறது?: சிலம்பொலி செல்லப்பன் கேள்வி



சென்னை கன்னிமாரா பொது நூலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் "திருக்குறள் வ.உ.சிதம்பரனார் உரை' என்ற நூலை சிலம்பொலி செல்லப்பன் வெளியிட அதைப் பெற்றுக் கொள்கிறார் வ.உ.சி. பேரன் சிதம்பரம். உடன் (இடமிருந்து) முனைவர் இரா.குமரவேலன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் ஒüவை நடராஜன், இ.சுந்தரமூர்த்தி, கவிஞர் ஈரோடு தமிழன்பன், முனைவர் இராம.குருநாதன்.


சென்னை, டிச. 20: அனைத்துப் பண்டிகை நாள்களிலும் தொலைக்காட்சி, வானொலியில் நாள் முழுவதும் நடிகர், நடிகைகளே ஆக்கிரமிப்பதால் நாடு அவர்களிடமிருந்து என்ன தெரிந்துகொள்ளப் போகிறது தெரியவில்லை என்று சிலம்பொலி செல்லப்பன் கூறினார்.

சென்னை கன்னிமாரா நூலகத்தில் சனிக்கிழமை "பாரி நிலையம்' சார்பில் வ.உ.சியின் திருக்குறள் உரை நூல் வெளியீட்டு விழாவில், நூலை வெளியிட்டு அவர் பேசியது:

"நாட்டுக்கு உழைத்தவர்களை மறந்துவிடுவது வழக்கமாக உள்ளது. இரட்டை ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த வ.உ.சி., ""மன்னிப்பு கேட்டால் போதும், விடுதலை செய்கிறேன்'' என்ற போதும் மன்னிப்பு கேட்க மறுத்தார். மற்றவருக்கு சிறப்பான விழாக்கள் கொண்டாடும்போது வ.உ.சிக்கு விழாக்கள் இல்லை என்பது வருத்தம்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஒüவை நடராஜன்: திருக்குறளின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் உரையோடு படித்து தமிழ் மக்கள் பாராயணம் செய்ய வேண்டும் என்றார் வ.உ.சி.

திருக்குறளில் அறப்பால் என்ற நூலை வெளியிட்டுள்ளார். வ.உ.சியின் நிறைவேறாத இருபெரும் கனவான தேச விடுதலை அவர் மறைந்த 11 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்தது; 68 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குறள் உரை நூலும் வெளியாகியுள்ளது என்றார்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.சுந்தரமூர்த்தி: வ.உ.சி முதலில் எழுதிய கட்டுரை கடவுளும் பக்தியும் ஆகும். வ.உ.சி என்றாலே நெற்றியில் திருநீறு அணிந்திருப்பவர்; திருக்குறளில் இடம்பெரும் கடவுள் வாழ்த்து அதிகாரம் திருவள்ளுவர் எழுதியதா? சொற்களோ பொருள் முறையோ ஐயமாக உள்ளது.

வான் சிறப்பு, நீத்தார் பிறப்பு, உரைப்பாயிரம், மெய் உணர்தல், துறவும் வள்ளுவர் எழுதியதாக இருக்காது என்று மறுக்கிறார்.

வழிவழியாக வரும் 3 அதிகாரத்தில் வ.உ.சிக்கு உடன்பாடில்லை. ஆனால் அவர் எழுதிய திருக்குறளில் அதை நீக்க விரும்பவில்லை என்றார்.

கவிஞர் ஈரோடு தமிழன்பன்: பாரி நிலைய உரிமையாளர் செல்லப்பன் 60 ஆண்டு பேணி பாதுகாத்த வ.உ.சியின் கையெழுத்துப் பிரதியை அவரது மகன் முயற்சியில் வெளிவந்துள்ளது மகிழ்ச்சிக்குரியது.

வ.உ.சி ஆன்மிகவாதி, அரசியல்வாதி, பதிப்பாசிரியர், இதழ் ஆசிரியர், தொழிற்சங்கவாதி, கப்பல் வர்த்தகர், வழக்கறிஞர் என பன்முகம் கொண்டவர் என்றார் தமிழன்பன்.

வ.உ.சி எழுதிய அமர்ஜோதி, மனம்போல வாழ்வு, அகமே புறம், வளமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம், மெய்யறிவு, மெய்யறம், தொல்காப்பியம் இளம்புராணம், சுயசரிதை, திருக்குறள், வ.உ.சி கட்டுரைகள் ஆகிய நூல்களை பாரி நிலையம் வெளியிட்டுள்ளதாக அதன் உரிமையாளர் செ. அமர்ஜோதி தெரிவித்தார்.

No comments: