Sunday, December 21, 2008

தரமற்ற எழுத்துகள் இயற்கைக்கு செய்யும் துரோகம்: "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன்

தரமற்ற எழுத்துகள் இயற்கைக்கு செய்யும் துரோகம்: "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன்

மதுரை, டிச. 20: சமுதாயத்துக்குப் பயன்படாத வகையில் தரமற்ற எழுத்துகளைத் தாங்கிவரும் புத்தகங்கள் இயற்கைக்குச் செய்யும் துரோகம் என "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் கூறினார்.

மதுரை தமிழ்ச் சங்கம், செந்தமிழ்க் கல்லூரி சார்பில் சனிக்கிழமை "தேமதுரத் தமிழோசை' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் "நல்ல காகிதம் செய்வோம்' எனும் பொருளில் அவர் பேசியது:

தமிழகத்தில் தமிழை வளர்ப்பதற்காக, மீண்டும் தமிழின் பெருமையை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்புதான் மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்.

அப்படிப்பட்ட தமிழ்ச் சங்கத்துக்கு தமிழ், தமிழன் என்று பேசித்திரியும் நம்மால் நூற்றாண்டு விழா எடுக்க முடியவில்லையே ஏன் என்கிற, எனது ஆதங்கத்தை எழுத்தாக கொட்டித் தீர்த்தேன். இப்போது நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. மகிழ்ச்சி, பாராட்டுகள்.

மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் நிறுவியபோது, ஒரு நல்ல தமிழ்த்தாய் வாழ்த்து எழுதப்பட வேண்டும் என்று பாண்டித்துரை தேவர் விரும்பினார்.

சங்கம் வெளிக்கொணரும் "செந்தமிழ்' பத்திரிகையில் ஒரு போட்டிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? ரூபாய் நூறு! அப்போது தங்கம் ஒரு பவுன் ரூ.8-க்கு விற்ற காலம். புதுவையிலிருந்து கவிஞர் பாரதிதாசன் உள்ளிட்ட பாரதியின் நண்பர்கள், அவர்தான் தமிழ்த்தாய் வாழ்த்து எழுத வேண்டும் எனவும், அதற்காக அந்தப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அழைத்தனர்.

ஆனால் மகாகவி சுப்பிரமணிய பாரதி அந்தப் போட்டியில் கலந்துகொள்ள மறுத்தார். ஏன் தெரியுமா? பணத்துக்காகத் தமிழை வாழ்த்துவதா? அதை நான் செய்வதாய் இல்லை என்றார் அவர்.

தமிழுக்கு நல்ல வாழ்த்து கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழ்த்தாய் வாழ்த்தை எழுத வேண்டும் என பாரதியாரிடம் கேட்டுக் கொண்டதாக பாரதிதாசன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அதில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாரதியாரை எழுதவைக்க சிரமப்பட்டோம் என்பதையும் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ளார்.

தரமில்லாத கவிதை தமிழ்த்தாய் வாழ்த்தாகி விடக்கூடாது என்கிற பாரதிதாசனின் வற்புறுத்தலால் எழுதப்பட்டதுதான் பாரதியின் "செந்தமிழ் நாடெனும் போதினிலே..' என்கிற கவிதை.

சமீபத்தில் "சாளரம்' நூல் வெளியீட்டு விழாவில் நான் நல்ல படைப்புகள் வரவேண்டும் எனக் குறிப்பிட்டேன். அடிப்படையில் புத்தகங்களை தேவையில்லாமல் வெளியிடுவதை நான் ஆதரிப்பவன் அல்ல. நல்ல படைப்புகள் வரவேண்டுமே தவிர குப்பை கூளங்கள் நூலக அலமாரிகளில் அடுக்கப்படக் கூடாது.

எழுத்தாளனைப் பொருத்தவரை எழுதுவதெல்லாம் நல்ல எழுத்தாக இருக்கலாம். ஆனால் காலத்தைக் கடந்து ஓர் எழுத்து நிற்குமானால் அதுதான் சிறந்த எழுத்து.

ஏதோ வாசித்துவிட்டு தூக்கிப்போடுவதை எல்லாம் இலக்கியமாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு காகிதத்துக்குப் பின்னாலும் ஒரு மரம் அழிக்கப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

நல்ல எழுத்துக்காக இயற்கை சற்று சேதப்படலாம். ஆனால் தரமற்ற படைப்புகளுக்காக இயற்கை அழிக்கப்படுவதா? நாம் நல்ல படைப்புகளை மட்டுமே ஆதரிக்க வேண்டும் என்ற கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும்.

நாளைய தலைமுறைக்காக எழுத்து அமையுமானால் அதை நிறையவே எழுதலாம். இலக்கியம் என்பது நம்மைக் கடந்து நமது வாழ்வைக் கடந்து காணப்பட வேண்டும்.

எழுத்து நல்லதாக இருந்தால் மட்டும்தான் அதைத் தாங்கிவரும் காகிதமும் நல்லதாக அமையும். இல்லை என்றால் அதற்குப் பெயர் காகிதமல்ல, குப்பை என்றார் வைத்தியநாதன்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு தமிழ்ச் சங்கத் தலைவர் முகவை மன்னர் நா.குமரன்சேதுபதி தலைமை வகித்தார். செந்தமிழ்க் கல்லூரிச் செயலர் ரா.குருசாமி, தமிழ்ச் சங்கச் செயலர் ரா.அழகுமலை ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

கல்லூரி முதல்வர் க.சின்னப்பா வரவேற்றார். பேராசிரியை தனலெட்சுமி நன்றி கூறினார்.

No comments: