Sunday, December 21, 2008

சென்னையில் ``ரெயிலே வராமல் ஒரு ரெயில்நிலையம்''

சென்னையில் ``ரெயிலே வராமல் ஒரு ரெயில்நிலையம்''
இரவில் காதலர் பூங்காவாக மாறுகிறது


சென்னை, டிச.21-

சென்னையில் ரெயிலே வராமல் ஒரு ரெயில் நிலையம் அண்ணாநகரில் உள்ளது. இரவு நேரங்களில் காதலர்களின் பூங்காவாகவும் மாறிவிடுகிறது.

அண்ணாநகர் ரெயில்நிலையம்

சென்னை பெரம்பூரில் ரெயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை (ஐ.சி.எப்) உள்ளது. இங்கு தயார் செய்யப்படும் பெட்டிகளை வெளியே அனுப்புவதற்காக வில்லிவாக்கம் - ஐ.சி.எப் இடையே 3.09 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டு அது செயல்பட்டு வருகிறது.

இந்த தண்டவாளத்தை 7.29 கோடி செலவில் பலப்படுத்தி அந்த மார்க்கத்தில் பயணிகள் ரெயில் சேவையையும் தொடங்க தெற்கு ரெயில்வே முடிவு செய்தது. அந்த இடைப்பட்ட இடத்தில் பாடி, அண்ணாநகர் ஆகிய 2 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டன. மேலும், அண்ணாநகரில் இருந்து கோயம்பேடு வரை ரெயில்வே பாதை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த 2003-ம் ஆண்டு அப்போது மத்திய ரெயில்வே இணை மந்திரியாக இருந்த ஏ.கே.மூர்த்தி அந்த மார்க்கத்தில் ரெயில் சேவையை தொடங்கி வைத்தார்.

அண்ணாநகர் ரெயில் நிலையத்தால் திருமங்கலம் சாலை, லெட்சுமிபுரம், ஐகோர்ட்டு காலனி, நாவலர் நகர், தென்றல்காலனி, முல்லை நகர், கம்பர் குடியிருப்பு, அகத்தியர் நகர், குமாரசாமி நகர், பொன்விழா நகர், லெட்சுமி தெரு உள்பட அந்த பகுதியில் இருந்தவர்கள் பயன் அடைந்தனர்.

இந்த நிலையில் பாடி சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கின. அதை காரணம் காட்டி அண்ணாநகருக்கு இயக்கப்பட்டு வந்த ரெயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. மேம்பாலப்பணிகள் முடிந்த பிறகு அண்ணாநகருக்கு ரெயில் விடப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 6 மாதங்களாக அங்கு ரெயில் எதுவும் வருவதில்லை. ஐ.சி.எப்-ல் தயாரிக்கப்படும் ரெயில் பெட்டிகள் மட்டுமே அந்த வழியில் செல்கின்றன.

சமூக விரோத செயல்

ரெயிலே வராத அண்ணாநகர் ரெயில் நிலையம் தற்போது பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடக்கின்றன. பகலில் மட்டும் எப்போதாவது ரெயில்வே பாதுகாப்பு போலீசார் வந்து பார்த்து விட்டு செல்வதுடன் சரி. இதன் காரணமாக அண்ணாநகர் ரெயில் நிலையம் இரவு நேரங்களில் காதலர்களின் பூங்காவாக மாறிவிடுகிறது. ஆள் அரவம் இல்லாத ஒதுக்குப்புறமாக ரெயில் நிலையம் அமைந்திருப்பது காதலர்களுக்கு வசதியாக உள்ளது.

காதலர்களை தவிர, இரவு நேரங்களில் அங்கு விபசாரமும் கொடிகட்டிப்பறப்பதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள். பகல் நேரங்களில் அந்த ரெயில் நிலையத்தில் வாலிபர்கள் மது அருந்துகிறார்கள். சமூக விரோத செயல்கள் நடைபெற்று வரும் அண்ணாநகர் ரெயில் நிலையத்தை பராமரிக்க வேண்டும் என்றும், கோயம்பேடு வரை ரெயில் மார்க்கத்தை நீட்டினால் ஏராளமானோர் பயன்பெறுவார்கள் என்றும் அந்த பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர். இரவு நேரங்களில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரை நிறுத்தி அங்கு நடைபெறும் குற்ற சம்பவங்களை குறைக்க வேண்டும் என்றும் அவர்கள் மேலும் கோரிக்கை விடுத்தனர்.

No comments: