Friday, August 22, 2008

ஒரே சிந்தனையில் இருத்தலே வெற்றிக்கு வழி: ஐஏஎஸ் தேர்வில் வென்றவர் பேச்சு

ஒரே சிந்தனையில் இருத்தலே வெற்றிக்கு வழி: ஐஏஎஸ் தேர்வில் வென்றவர் பேச்சு


புதுக்கோட்டை, ஆக. 21: ஒரே சிந்தனையில் இருத்தலே வெற்றிக்கு வழி என்றார் ஜெஜெ கல்லூரியின் முன்னாள் மாணவரும், ஐஏஎஸ் தேர்வில் வெற்றியடைந்து பயிற்சி பெறுபவருமான க. விஜயேந்திரபாண்டியன்.

புதுகை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊக்குவிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியது:

கடும் உழைப்புக்குப் பலன் நிச்சயம். மகிழ்ச்சி, ஆர்வம், ஈடுபாடு ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு படித்தால் மட்டுமே வெற்றி கிட்டும்.

ஐஏஎஸ் பதவி என்பது சாதாரணமானவர்கள் நினைத்தே பார்க்க முடியாதது, அது மேட்டுக் குடியினருக்கு மட்டுமே சொந்தம் என்பதெல்லாம் வெறும் கற்பனை.

ஐஏஎஸ் அகாதமியில் தற்போது பயிற்சியில் என்னுடன் இருக்கும் பெரும்பாலானவர்கள் சாதாரண அடித்தட்டு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த முதல் தலைமுறையினர். இவர்கள் உத்வேகத்துடன் படித்ததால்தான் வெற்றி பெற்றனர்.

கடின உழைப்பால் வெற்றி நேருக்கு நேராக கிடைக்கும். அந்த வெற்றியைச் சுவைத்துவிட்டால் பின் திரும்பிப் பார்க்கும் எண்ணம் வராது.

மொழி இந்தப் படிப்புக்குத் தடை இல்லை. தாய்மொழியில் இந்த தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் தற்போது அதிகம்.

முதலில் நம்மை நாம் மதித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நடை, உடை பாவனைகள் மாறும். ஒரு அதிகாரி என்பதை மனதில் பதிய வைத்திருக்க வேண்டும்.

தற்போது சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுத பரந்து விரிந்த களம் உங்கள் முன் உள்ளது. பணம் சேர்க்க எத்தனையோ படிப்புகள் உள்ளன. ஆனால் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கமிருந்தால் மட்டுமே இதில் இயல்பாகவும், எளிதாகவும் வெற்றி பெறலாம்.

பணம் என்றும் நம்மை வழி நடத்தும் கருவியாகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முதல் முறை தேர்ச்சி பெற்று நேர்காணலில் 7 மதிப்பெண் குறைந்ததால் தோல்வியடைந்தேன்.

ஆனால், அடுத்த முயற்சியில் ஐஆர்எஸ் பதவி கிடைத்தது. ஐஏஎஸ் என் லட்சியம் என்பதால் மீண்டும் முயற்சி செய்து இந்த ஆண்டு வெற்றி பெற்றேன். தன்னம்பிக்கையுடன் ஒரே சிந்தனையில் முயற்சி செய்ததால் இதை அடைய முடிந்தது.

படிக்க மனம் இருந்தால் போதும் உங்கள் தேடுதல் நிறைவேறும். மாணவர்கள் கூச்சத்தை தவிர்க்க வேண்டும், கூச்சமில்லாமல் இருப்பது தற்போது தனி திறமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. விடா முயற்சியே ஐஏஎஸ் கனவை நனவாக்கும் என்றார் விஜயேந்திரபாண்டியன்.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி நிர்வாக அறங்காவலர் கவிதாசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

முதல்வர் ஜெ. பரசுராமன் வரவேற்றார். பிபிஎம் இயக்குநர் சோலையப்பன் நன்றி கூறினார்.

No comments: