Friday, August 22, 2008

போலி தனியார் ஏஜென்சிகளை கட்டுப்படுத்தவே வெளிநாடுகளுக்கு ஆள்களை தேர்வு செய்யும் முகாம்: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இயக்குநர் பேட்டி

போலி தனியார் ஏஜென்சிகளை கட்டுப்படுத்தவே வெளிநாடுகளுக்கு ஆள்களை தேர்வு செய்யும் முகாம்: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இயக்குநர் பேட்டி

திருநெல்வேலி, ஆக. 21: போலி தனியார் ஏஜென்சிகளை கட்டுப்படுத்தவே வெளிநாடுகளுக்கு ஆள்களை தேர்வு செய்து அனுப்பும் முகாம் நடத்தப்படுவதாக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இயக்குநர் பி.ஆர். பிந்துமாதவன் தெரிவித்தார்.

இதுகுறித்து திருநெல்வேலியில் வியாழக்கிழமை பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:

நாங்கள் வெளிநாடுகளுக்கு வீட்டு வேலைகள் தவிர இதர வேலைகள் அனைத்துக்கும் ஆள்களை தேர்வு செய்து அனுப்பி வருகிறோம்.

இதில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 6,800 பேரை வேலைக்காக பல்வேறு நாடுகளுக்கு தேர்வு செய்து அனுப்பி இருக்கிறோம். இந்தாண்டு இது வரை 300 பேரை தேர்வு செய்து அனுப்பி உள்ளோம். 340 பேரை அனுப்பும் தருவாயில் இருக்கிறோம்.

ஒமன், துபாய், குவைத், சவுதி அரேபியா, கத்தார் போன்ற அரேபிய நாடுகளுக்குத் தான் அதிகமாக ஆள்களை அனுப்பி வருகிறோம்.

இது தவிர சிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் ஆள்களை அனுப்பி வருகிறோம். இதில் அமெரிக்க நாட்டுக்கும் ஆள்களை தேர்வு செய்து அனுப்பும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறோம்.

வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்கள் எங்களிடம் கேட்பதை பொருத்து தான், ஆள்களை தேர்வு செய்து அனுப்புகிறோம்.

அந்த நிறுவனங்கள் ஒருவரின் அனுபவத்தையும், திறமையையும் பொருத்து ஊதியத்தை நிர்ணயம் செய்கின்றன. இதில் ஒரு நபருக்கு ரூ. 10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை கட்டணமாக நாங்கள் வசூல் செய்கிறோம்.

ஆனால் இதற்கு தனியார் ஏஜென்சிகள் இரண்டரை லட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கின்றன.

பயணக் கட்டணம், உணவு வசதி, தங்கும் வசதி, என்.ஆர்.ஐ இன்சூரன்ஸ் போன்ற அனைத்து சலுகைகளும் எங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு அழைத்து செல்லப்படுகிறவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

மேலும் மத்திய அரசின் கீழ் உள்ள அயல்நாடு செல்வோர் காப்பாளர் மையத்தில் பதியாமலேயே தனியார் ஏஜென்சிகள் பல வெளிநாடுகளுக்கு பல்வேறு விதிமுறைகளை மீறி ஆள்களை அனுப்புகின்றனர். இப்படிப்பட்ட ஏஜென்சிகள் மூலம் அழைத்து செல்லப்படுவர்கள் தான், வெளிநாடுகளில் பிரச்னைகளில் சிக்கிக் கொள்கின்றனர்.

இப்படிப்பட்ட ஏஜென்சிகளின் ஏமாற்றுவேலைகளை கட்டுபடுத்ததான், நாங்கள் சென்னையில் இருந்து மாநிலத்தின் பிற பகுதிகளிலும் வெளிநாட்டுக்கு ஆள்களை தேர்வு செய்து அனுப்பும் முகாம்களை நடத்துகிறோம். இது வரை 13 முகாம்கள் நடத்தி இருக்கிறோம்.

மேலும் வெளிநாடுகளில் வேலை செய்ய விரும்புவோர், எங்களது நிறுவனத்தில் தனியாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.

ஒமன் நாட்டில் ஒரு பெரிய கட்டுமான நிறுவனத்துக்கு கொத்தனார், டைல்ஸ், மார்பிள், பிளாக் ஒர்க்ஸ் வேலை செய்வோர், பிளாஸ்டரிங், கார்பெண்டர், பார்பெண்டர், எலக்ட்ரிசியன்கள், பிளம்பர்கள், என்ஜினீயர்கள் ஆகியோர் சுமார் 1,000 பேர் தேவைப்படுகிறார்கள். இதற்காக பாளையங்கோட்டையில் முகாம் நடந்தது.

மேலும், இந்தப் பணியிடங்களுக்கு இம் மாதம் 23-ம் தேதி ராமநாதபுரம், 24-ம் தேதி திருச்சி, 25-ம் தேதி ஆகிய இடங்களில் நடத்த உள்ளோம். இதேபோல பல இடங்களில் முகாம் நடத்த திட்டமிட்டு வருகிறோம் என்றார் பிந்துமாதவன்.

No comments: