Thursday, June 11, 2009

காந்தி மியூசியத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்: துணைத் தலைவர் பேட்டி

காந்தி மியூசியத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்: துணைத் தலைவர் பேட்டி

மதுரை, ஜூன் 10: மதுரை காந்தி மியூசியத்தில் விரைவில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்று அதன் துணைத் தலைவர் மு. மாரியப்பன் தெரிவித்தார்.

இது தொடர்பாக "தினமணி'யிடம் அவர் புதன்கிழமை கூறியது:

1959-ம் ஆண்டு ஏப்ரல் 15-ல் ஜவஹர்லால் நேருவால் மதுரை காந்தி மியூசியம் தொடங்கிவைக்கப்பட்டது. தென்னிந்தியாவிலேயே மதுரையில் தான் காந்தி மியூசியம் அமைந்துள்ளது. அகில இந்திய காந்தி நினைவு நிதி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்டு வரும் மதுரை காந்தி மியூசியத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் மற்றும் ராதா தியாகராஜன், ம.பொ.சி. உள்ளிட்டோர் தலைவர்கள் பொறுப்பை வகித்துள்ளனர்.

மத்திய அரசின் கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள நிரந்தர வைப்புத் தொகையின் வட்டியும், தமிழக அரசு சார்பில் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் கிடைக்கும் மானியத்தில்தான் இந்த மியூசியம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

தனியார் வசமாவதற்கு வாய்ப்பில்லை: இந்நிலையில் மியூசியத்தைப் பராமரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் நிதி ஆதாரம் தேவைப்பட்டதன் அடிப்படையில் பொதுக்குழு முடிவின்படி, பதவி வழி வந்த உறுப்பினர்கள் தவிர மேலும் சிலரை சேர்க்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக அவர்களிடம் ஆண்டுக்கு ரூ.5,000 பெறவும் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால், இந்த உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக இதுவரை முறைப்படி பதிவுத் துறையில் பதிவு செய்யாததால் அந்த தீர்மானத்தை செயல்படுத்தப்படாமல் போய்விட்டது.

மேலும், அகில இந்திய காந்தி நினைவு நிதி அறக்கட்டளையின் அனுமதி பெறாமல் மயூசியத்தில் புதிய கட்டடமோ, மேம்பாட்டுப் பணிகளோ மேற்கொள்ள முடியாது. இவ்வாறு இருக்கும்போது அறக்கட்டளையின் அனுமதியின்றி இந்த மியூசியத்தை எந்தத் தனியாரும் கைப்பற்றிவிட முடியாது. மதுரை மியூசியத்தில் ரூ.40 லட்சம் செலவில் "இன்ஸ்ட்டியூட் ஆப் காந்தியன் ஸ்டடி அன்ட் ரிசர்ச் சென்டர்' கட்டப்பட்டது, மியூசியம் முன்பு மாநகராட்சி அனுமதி பெறாமலேயே ரூ.5 லட்சம் மதிப்பில் ஹோட்டல் ஒன்று கட்டப்பட்டு, வாடகைக்கு விடப்பட்டது போன்றவை அறக்கட்டளை அனுமதி பெறாமல் நடைபெற்றுள்ளதால், சில பிரச்னைகள் இன்னும் நீடிக்கிறது.

மேம்படுத்த நடவடிக்கை: சென்ற ஆட்சியில் மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது பராமரிப்புப் பணிக்காக தில்லி மற்றும் கோல்கத்தாவில் உள்ள காந்தி மியூசியத்துக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை முன்மாதிரியாகக் கொண்டு மதுரை மியூசியத்துக்கும் ரூ.5 கோடி நிதி ஒதுக்கக் கோரியிருந்தோம்.

இதையடுத்து, அமைச்சரின் வேண்டுகோளின்படி மதுரை காந்தி மியூசிய விரிவாக்கம், மேம்பாடு குறித்த திட்ட வரைபடம் தமிழக அரசு மூலம் கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் அனுப்பிவைக்கப்பட்டது. விரைவில் அந்த நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
மேலும், வெளிநாட்டுப் பயணிகளுக்கு குடிநீர் மற்றும் கழிப்பிட வசதியை மேம்படுத்தும் வகையில், "ஐரோப்பிய முறையிலான டாய்லட்', தரமான உணவு வகைகள் கொண்ட கேன்டீன், குடிநீர் வசதி, காந்தியால் எழுதப்பட்ட புத்தகங்கள் உள்பட நினைவுப் பொருள்கள் விற்பனை செய்யும் பிரிவு உள்ளிட்டவை ரூ.10 லட்சத்தில் தொடங்க கடந்த 7 மாதங்களுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டுள்ளது. விரைவில் இத் திட்டங்களும் நிறைவேற்றப்படும்.
தமிழக அரசின் மானியம் உயர்த்தப்படவேண்டும்: மியூசியம் பராமரிப்பு மற்றும் ஊழியருக்கான சம்பளம் தொடர்பான செலவைச் சரிக்கட்ட தமிழக அரசும் ஆண்டுதோறும் மானியம் வழங்குகிறது.

இந்த மானியத்தை ஆண்டுக்கு ரூ.10 லட்சமாக வழங்க வேண்டும் என ஏற்கெனவே கோரியிருந்தோம். ஆனால், அது நிராகரிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில், தமிழக கலை மற்றும் பண்பாட்டுத்துறை செயலர் பங்கேற்ற கூட்டம் ஒன்றில் இக்கோரிக்கையை மீண்டும் வைத்தோம். அவரது ஆலோசனையின்பேரில் மானியம் உயர்த்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் தமிழக அரசுக்கு விடுத்துள்ளோம். இதுபோன்ற நிதி ஆதாரங்கள் கிடைக்கும்பட்சத்தில் மதுரை காந்தி மியூசியத்தை மேலும் சிறப்பாக மாற்றியமைக்கலாம் என்றார்.

No comments: