Thursday, June 11, 2009

காந்தி மியூசியம் தனியார் வசமாகிறதா?

காந்தி மியூசியம் தனியார் வசமாகிறதா?


கொ.காளீஸ்வரன்





http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=71891&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=


மதுரை, ஜூன் 9: புதிய பொதுக் குழு மேற்கொண்டுள்ள முடிவால் தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவுகளை சுமந்துகொண்டு காட்சியளிக்கும் "மதுரை காந்தி மியூசியம்' தனியார் வசம் சிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

மதுரை காந்தி மியூசியத்துக்கு என தனி சிறப்பு உள்ளது. தென் இந்தியாவிலேயே அண்ணல் காந்திக்கு என மியூசியம் உள்ள இடம் மதுரை மட்டும் தான். இது, காந்தி மியூசியம் அசோஷியேசன் சார்பில் தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது.

மகாத்மா காந்தியடிகள் தமிழகத்துக்கு வந்த 20 தடவையில் 5 முறை மதுரை வந்துள்ளார். காந்தியடிகள் கொல்லப்பட்ட பின்னர், அவரது நினைவாக, ஜவஹர்லால் நேருவால் 1957-ல் தொடங்கப்பட்டதுதான் மதுரை காந்தி மியூசியம்.

காந்தி மியூசியம் அமைக்க ஹைதராபாத், சென்னை, மைசூர் என 7 இடங்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் அப்போது முதல்வராக இருந்த காமராஜராலும், எம்.பி.யாக இருந்த என்.எம்.ஆர். சுப்புராமன் முயற்சியாலும்தான் இந்த மியூசியம் மதுரைக்கு கொண்டுவரப்பட்டது எனக் கூறுவர்.

சுமார் 13 ஏக்கர் பரப்பில் ராணி மங்கம்மாளின் அரண்மனையாக இருந்த இந்த இடம் 1956-லிலேயே புதுதில்லியில் உள்ள "அகில இந்திய காந்திய ஸ்மாரட் நிதிக்கு' நன்கொடையாக வழங்கப்பட்டது.

காந்தியின் வாழ்க்கையை சித்தரிக்கும் அரிய புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய
ரத்தக்கறை தோய்ந்த வேஷ்டி, மூக்குக் கண்ணாடி, ராட்டையில் நூற்ற நூல், அவர் பயன்படுத்திய கைக்குட்டை, செருப்பு, தலையணை, கம்பளி உள்ளிட்ட 14 பொருள்கள் இன்றைக்கும் பாதுகாப்பாக இந்த மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர மதுரைக்கு அனுப்பிவைக்கப்பட்ட காந்தியின் அஸ்தி, இந்த மியூசியத்தில் உள்ள "அமைதிப் பூங்கா' என்ற பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற காந்தியை நினைவுகூரும் பல சான்றுகள் இந்த மியூசியத்தில் வைக்கப்பட்டு, அவரது கொள்கைகளை பரப்பி வருகிறது.

மியூசியத்தை பராமரிக்க, மத்திய அரசின் கலை மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் வழங்கப்பட்ட ரூ. 2 கோடி நிரந்த வைப்புத் தொகையின் வட்டியும், தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூ. 1.50 லட்சம் மானியத்தில் தான் மியூசியம் பராமரிப்பு, ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட செலவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போதிய அடிப்படை வசதிகள் இல்லை: மாதம் சுமார் 10,000 பேர் இந்த மியூசியத்தைப் பார்வையிட வருகின்றனர். இதில், வெளிநாட்டினர் 1,200 பேர் வரை வந்து செல்கின்றனர். பார்வையாளர்களுக்கான கழிப்பிட வசதியோ, குடிநீர் வசதியோ போதிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை.

மேலும், இந்த காந்தி மியூசியக் கட்டடத்துக்கு கடந்த 10 ஆண்டுகளுக்குமுன் வர்ணம் பூசப்பட்டுள்ளது. தற்போது இந்த கட்டடம் ஆங்காங்கே கீறல்கள் விழுந்தும், மரக் கிளைகள் முளைத்தும் பரிதாப நிலையில் காட்சியளிக்கிறது.

புதிய பொதுக் குழு திடீர் முடிவு: இந்த மியூசியம் 30 உறுப்பினர்கள் கொண்ட கமிட்டியின் பராமரிப்பில் உள்ளது. இந்த 30 உறுப்பினர்களில் மாவட்ட ஆட்சியர், மேயர், பல்கலைக்கழக துணைவேந்தர், கல்வி அமைச்சர், அரசு செயலர் என பதவி வழிவந்த 10 உறுப்பினர்களும், 19 பேர் நியமன உறுப்பினர்களும், ஒருவர் ஊழியர் உறுப்பினர் எனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பதவி வழி வந்த உறுப்பினர்கள் தவிர மீதமுள்ள உறுப்பினர்கள், 200 பேர் கொண்ட ஒரு பொதுக் குழுவை புதிதாக நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன்படி, இதில் உறுப்பினர்களாக விரும்புவோர் ஆண்டுக்கு ரூ. 5,000 செலுத்தி பொதுக் குழு உறுப்பினர்களாக பதவி வகிக்கலாம். இந்த முடிவுப்படி தற்போது வரை 130-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் என்ன ஆபத்து என்றால், புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள பொதுக் குழுவில் ஒரு நபருக்கு ஆதரவாக பெரும்பாலான உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர் என தியாகிகளாலும், பொதுமக்களாலும் கூறப்படுகிறது. ஒரு காலகட்டத்தில் இந்த பொதுக்குழுவில் உள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் எடுக்கும் எந்த முடிவையும் தடுக்கமுடியாமல் போய்விடும். அப்போது தனி நபர்கள் வைத்ததுதான் சட்டம் என மாறிவிடும் என விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து தற்போதைய காந்தி மியூசிய செயலர் ரெங்கசாமி கூறுகையில், நிதி திரட்டவேண்டிய கட்டாயத்திலேயே புதிய பொதுக்குழு ஏற்படுத்தப்பட்டது. இதில், நன்மை, தீமை என இரு பார்வையுமே உள்ளன. சூழ்நிலைக்குத் தகுந்தவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், காந்தி மியூசியத்தை புதுப்பிக்கும் பணிக்காக தமிழக அரசிடம் நாங்கள் நிதி கோரியுள்ளோம் என்றார்.
அரசு ஏற்குமா?

வரலாற்று சிறப்பு மிக்கதாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கும் காந்தி மியூசியம் என்றாவது ஒருநாள் தனியார் கைக்குச் செல்வதைவிட, தமிழக அரசே தற்போது ஏற்று, தனி அதிகாரி நியமித்து பராமரிக்கப்படவேண்டும் என, தியாகிகளும், பொதுமக்களும் கோரிக்கை எழுப்புகின்றனர்.

No comments: