Friday, August 15, 2008

ராமநாதபுரம் உள்பட 19 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 267 கோடி இழப்பீடு

ராமநாதபுரம் உள்பட 19 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 267 கோடி இழப்பீடு


சென்னை, ஆக. 14: ராமநாதபுரம் மாவட்டம் உள்பட 19 மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 267.62 கோடி இழப்பீடாக வழங்கப்பட உள்ளது என்று வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி எஸ். ஆறுமுகம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் மட்டுமே பயனடைந்து வந்த இத்திட்டத்தில், பயிர்க்கடன் பெறாத விவசாயிகளையும் சேர்த்து அவர்கள் செலுத்தும் பிரிமீயம் தொகையில் 50 சதத்தை மானியமாக வழங்கிட 2006-07-ல் ரூ.8 கோடியும், 2007-08-ல் ரூ.15 கோடியும், 2008-09-ல் ரூ.40 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் 2005-ல் 1 லட்சமாக இருந்த விவசாயிகளின் எண்ணிக்கை 2006-ல் 3 லட்சமாகவும், 2007-ல் 5.5 லட்சமாகவும் உயர்ந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் உள்பட 19 மாவட்டங்களில் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பீட்டு தொகை ரூ. 267.62 கோடி என இந்திய வேளாண் காப்பீடு நிறுவனத்தால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 150.53 கோடியும், சிவகங்கை விவசாயிகளுக்கு ரூ. 57.73 கோடியும், நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ. 27.96 கோடியும் இழப்பீடாக வழங்கப்பட உள்ளது.

இழப்பீட்டு தொகையில் 50 சதம் மாநில அரசும், 50 சதம் மத்திய அரசும் ஏற்கின்றன. இழப்பீட்டுத் தொகையை நேரடியாக விரைவில் வழங்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

சில அரசியல் கட்சிகள் விவசாயிகளை தூண்டிவிட்டு அரசியல் லாபம் பெற முயற்சிப்பதற்கு, செவிசாய்க்காமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

No comments: