Friday, August 15, 2008

அரசு ஊழியர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வைத்திருந்தால் தகவல் தெரிவிக்கலாம்

அரசு ஊழியர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வைத்திருந்தால் தகவல் தெரிவிக்கலாம்



ராமநாதபுரம், ஆக. 14: அரசு ஊழியர்கள் அவர்கள் பெயரிலோ அல்லது பினாமி பெயரிலோ வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருந்தால் தகவல் தெரிவிக்குமாறு ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்கள் வி.பொன்னம்பலம், ரா.சந்திரசேகரன் ஆகியோர் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:

அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை அணுக வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறீர்கள். ஆனால் உங்களுடைய அவசியத்தையும், அவசரத்தையும் தெரிந்து கொள்ளும் அவர்கள் எவ்வித பலனையும் எதிர்பார்க்காமல் செய்து கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் அந்தக் காரியத்தை செய்து கொடுப்பதற்காக உங்களிடம் லஞ்சம் கேட்பார்கள். இதற்கு நீங்கள் லஞ்சம் தரவேண்டியதில்லை. எனவே அவர்களைப் பற்றிய புகார்களை நீங்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நேரில் வந்து தெரிவிக்கலாம்.

ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் ராமநாதபுரம் பாரதிநகர் ஓம்சக்தி கோயில் அருகில் கதவு எண் 2/1873 என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உங்களுடைய வேலையை முடிக்காமல் வேண்டும் என்றே காலதாமதம் செய்தாலும் நீங்கள் தகவல் தெரிவிக்கலாம்.

முக்கியமாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருந்தாலும் அரசு ஊழியர்கள் அவர்கள் பெயரிலோ அல்லது பினாமி பெயரிலோ சொத்து வாங்கி இருந்தாலும் தெரிவிக்கலாம். சொத்து விபரம் (நிலம், வீடு, வீட்டுமனை, வங்கி சேமிப்பு, வாகனங்கள், டெபாசிட், லாக்கர், பாலிசிகள், தங்கம், வெள்ளி முதலிய ஆபரணங்கள், ரொக்கம் முதலியன) பற்றியும் நீங்கள் தகவல் தெரிவிக்கலாம்.

இது குறித்து தபால் மூலமும் தகவல் தெரிவிக்கலாம். லஞ்ச ஒழிப்பு அலுவலக தொலைபேசி எண் 04567-230026 அல்லது இன்ஸ்பெக்டர்கள் வி.பொன்னம்பலம் (9443503477), ரா.சந்திரசேகரன் (9442268400) என்ற எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

No comments: